Hot Posts

6/recent/ticker-posts

துள்ளித் திரிந்த காலம் (மலரும் நினைவுகள்

இமாம் ஷாஃபி [ரஹ்] பள்ளியின் 36 ஆம் ஆண்டுவிழா அழைப்பிதல் குறித்த பதிவில் நண்பன் CROWN தஸ்தகீர், பள்ளிப்பருவ இறுதி நாட்களின் மலரும் நினைவுகளைக் கொளுத்திப் போட்டு குளிர்காய முனைந்துள்ளார்(ன்).

வாய்க்கால்தெரு ஊ.ஒ.தொ (ஓட்டப்) பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது சைக்கிள் கேரியரில் பெரிய நோட்டுக்களுடன் காதிர் முஹைதீன் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் சீனியர் மாணவர்களைப் பார்த்து நாமும் எப்போது இதுபோன்று பெரியசைஸ் நோட்டுக்களைக் கொண்டு செல்வோம் என்ற ஏக்கம் ஐந்து வருடங்கள் கழித்து 11 ஆம் வகுப்பில் நிறைவேறியது.

வாய்க்கால்தெரு பள்ளியில் 1- 5 ஆம் வகுப்புகள்வரை படித்தபோது படிப்பில் புதுத்தெரு நிஜாமுத்தீன் (நட்புடன் 'நஜாத்' நிஜாமுதீன் என்போம்!) முதல் ரேங்கும், சின்னநெசவு தெரு அபூபக்கர் இரண்டாம் ரேங்கும் அடியேன் மூன்றாம் ரேங்கும் எடுப்போம்.அதன்பிறகு நிஜாமுதீனும் அபூபக்கரும் 6-A பிரிவிலும் நான் 6-B பிரிவிலும் பிரித்துக்கட்டப்பட்டோம்.

வெவ்வேறு பள்ளி மற்றும் அக்கம்பக்க ஊர்களிலிருந்தும் வந்துசேர்ந்த மாணவர்களால் ரேங்க் எடுக்கும் போட்டியில் பின்னுக்குத் தள்ளப்பட்டேன். அதன்பிறகு ரேங்க்கும் எனக்கும் தொடர்பு இல்லாமல் போனது.


காதிர் முஹைதீன் பள்ளியில் காலடிபதித்த நாட்களில் நடந்த ஆண்டு விழாவில் (வருடம் நினைவில்லை) எங்கள்தெரு முஹம்மது ஷாஃபி காக்கா அவர்கள் 10ஆம் வகுப்பில் சிறந்த மாணவராக தொடர்ச்சியாக 5 பரிசுகளைப் பெற மேடைக்கு அழைக்கப்பட்டபோது கிடைத்த கரவொலிகள் நமக்கும் கிடைக்காதா என்ற கனவு மட்டுமே இருந்தது. (நம் ஜனாதிபதி அப்துல்கலாம் காணச்சொன்ன கனவை நான் அன்றே கண்டேன்?!)

பத்தாம் வகுப்பில் அரையாண்டு தேர்வு அறிவியல் பாடத்தில் "இரயில் எஞ்சின் படம்வரைந்து பாகங்களைக் குறி" என்ற பத்து மார்க் கேள்விக்குக் கிடைத்த 7 மார்க்குகள் கூட்டப்படாமல் வெறும் 29 மார்க் மட்டுமே பெற்று வாழ்க்கையிலேயே முதல்முறையகா 35க்குக் கீழாக மதிப்பெண் பெற்று வழக்கமாகக் கிடைக்கும் 27 அல்லது 28 வது ரேங்கும் கைநழுவிப் போனது!

பேப்பரை திருத்திய திருமதி.மேகலா டீச்சரிடம் இரயில் எஞ்சின் பாகங்களுக்காகப் பெற்ற "7" மார்க் கூட்டப்படாமல் ரேங்க் போய் விட்டது என்று கவலையுடன் சொன்னபோது, பேப்பரைக் கொண்டுவாடா மறுகூட்டல் செய்யலாம் என்றார்கள்.ஆர்வத்துடன் விடைத்தாளுடன் சென்ற எனக்கு மறுகூட்டலுக்குப் பதில் தலையில் 'குட்டல்' (குட்டு)தான் கிடைத்தது!

ரயில் எஞ்சின் குறித்த பாடத்தைப் படிக்காமலேயே கம்பன் எக்ஸ்ப்ரஸின் முகப்புப் பெட்டியை கள்ளம்கபடம் இல்லாமல் வரைந்தால் எந்த டீச்சர்தான் மதிப்பெண் போடுவார்? அப்படி என்றால் எப்படி 7 மார்க் கிடைத்தது அதை ஏன் சேர்த்துக் கூட்டவில்லை? விசயம் ஒன்றுமில்லை பெரிதாக "?" என்று போட்டிருந்ததை நான் "7" என்று நினைத்துக் கொண்டே, 29+?=36 என்று தப்புக் கணக்கு போட்டிருந்தேன் (அப்ப அறிவியலோடு கணக்கிலும் வீக்கா? :-)

இப்படியாக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்த என் வாழ்வில் மதிப்பிற்குறிய ஆசான்கள் சீனிவாசன் சார், ஹாஜி முஹம்மது சார்,அஹமது தம்பி சார் & ப்ரான்சிஸ் சார் மற்றும் ராமதாஸ் ஐயா (தமிழாசிரியர்!) ரூபத்தில் மீண்டும் கல்விக்கண் திறக்கப் பெற்றேன்.(தற்போதும் இவர்கள் அதே பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.)

வாழ்விலேயே முதல்முறையாக +1 காலாண்டுத் தேர்வில் பெரும்பாலான பாடங்களில் முதல் நிலை பெற்று 1989 இல் +2 முடித்து வெளியாகும்போது காதிர் முஹைதீன் பள்ளியிலேயே (பட்டுக்கோட்டை அளவிலும் என்று நினைக்கிறேன்)முதல் மாணவனாக (அல்ஹம்துலில்லாஹ்) வென்று

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்ற குறள் சொன்ன மகிழ்ச்சியை என் பெற்றோருக்கு பரிசளித்தேன்! (அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்)

நிற்க, இந்தப்பதிவில் பெரும்பாலும் சுயதம்பட்டமாகப் போய்விட்டாலும், மிக மிக முக்கிய தகவல்களை வேண்டுமென்றே விட்டுச்சென்றுள்ளேன். எவன் இந்த அபூஅஸீலா என்ற கேள்விக்கான குறிப்பை காதர் முஹைதீன் பள்ளி பழைய ரெக்கார்டுகளைக் கிளறினால் கிடைக்கும்.(இரண்டு வருடங்களுக்கு முன்புவரை +2 முதல்நிலை மாணவர்களின் பெயர்களை காதிர்முஹைதீன் பள்ளி நுழைவாயிலிலுள்ள தலைமை ஆசிரியர் அலுவலகத்தின் சுவற்றில் பெயிண்டால் எழுதி வைத்திருந்தார்கள்.தற்போதும் உள்ளதா என ஊரில் இருப்பவர்கள் உறுதி செய்தால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்)

இப்பதிவை பால்ய நண்பர்கள் குறிப்பாக 'நஜாத்' நிஜாமுதீன் - பள்ளியில் படிக்கும்போதே அன்றைய நஜாத்தில் (இன்றைய தஹ்வீது ஜமாத்!) ஈடுபாடு ஏற்பட்டபின் நிஜாமுதீன் என்பதை நிழாமுத்தீன் என்று எழுதுவான்),அப்துல் ஹாதி (சிறையிலிருந்த ஹாதிக்கு எதிராக ஜிந்தா என்ற வேடத்தில் நடித்த 'சுண்டு" சாவன்னா @ ஷாகுல் ஹமீதுக்கு ஆதரவாக பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் எனக்கெதிராக வக்கீலாக வாதாடிய K.S. நஜ்முதீன்) மற்றும் பல பள்ளித் தோழர்களும் வாசித்தால் மகிழ்வடைவேன்.

இப்பதிவு சுவாரஸ்யமாக இருந்தால் பின்னூட்டுங்கள். பின்னூட்டங்களை வைத்தே "தலை கேட்டான் தம்பி"யை வென்று திரு.சண்முகம் ஆசிரியரின் ஊக்கத்தால் மேடையேறிய எங்கள் நாடகம் குறித்த சுவாரஸ்யத் தகவல், துக்கப் பரிச்சை மற்றும்பல சுவாரஸ்யமான பள்ளி நாட்களைப் பகிர்ந்து கொள்வேன் இன்ஷா அல்லாஹ்!

துள்ளித் திரிந்த பள்ளிப்பருவ நாட்களை மலரும் நினைவுகளாக கிளறிவிட வழியமைத்த அதிரை எக்ஸ்ப்ரஸ் மற்றும் நண்பன் பாதாங்கீருக்கு (CROWN தஸ்தகீரை இப்படித்தான் அழைப்பேன்:) எங்கிருந்தாலும் வாழ்க!

நன்றி: கா.மு.ஆ.மே.பள்ளி வலைப்பூ (புகைப்படம்