Hot Posts

6/recent/ticker-posts

கூடங்குளம் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து ஒப்பாரி போராட்டம்..



 கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினர் மத்திய அரசை கண்டித்து ஒப்பாரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் அணுமின்நிலைய எதிர்ப்பு குழுவினர் 78வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து நேற்று இடிந்தகரையில் போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதில் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினர் அமைத்துள்ள 21 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள யுரேனியம் எரிபொருளை அகற்ற வலியுறுத்துவது, முதல்வரை சந்திக்க நெல்லை கலெக்டர் மூலம் தேதி ஒதுக்குமாறு மனுகொடுப்பது, முதல்வரை சந்தித்த பின்னர் அடுத்த கட்டமாக தீவிர போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஜனவரி 12ம் தேதி கூடன்குளம் அருகில் உள்ள பரமேஸ்வரபுரத்திலிருந்து ராதாபுரத்திற்கு சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடை பயணம் செல்லவும், இதன் முடிவில் ராதாபுரம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.  வரும் 23ம் தேதி திருச்செந்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தவும், 26ம் தேதி பெருமணல் கடற்கரை கிராமத்தில் இருந்து செட்டிகுளம் வரை நடைபயணம் மேற்கொண்டு அங்கு உண்ணாவிரதம் இருக்கவும், 30ம் தேதி மத்தியஅரசை கண்டித்து ஒப்பாரி போராட்டம், கூடங்குளம் அணு உலைகளின் மாதிரிகளை எரித்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.