Hot Posts

6/recent/ticker-posts

இல்லறத்தை நல்லறமாக்குவோம்!!

ஒரு நாட்டின் பெருமை,நலமாக- வாழ்கின்ற மனித சமுதாய அமைப்பையே அடிப்படையாக கொண்டது.சிறந்த சமுதாயம் அமைவது கல்வி,நற்பண்புகள்,பொருளாதாரம் சிறக்க வாழ்கின்ற குடும்பங்களில் கட்டமைப்பைப் பொருத்ததாகும்.இல்லறம் என்று கூறப்படும் குடும்பப் பாங்கு மனித வாழ்வுக்கு மகுடம் போன்றது.

"நல்லதொரு குடும்பம் ஓர் அறிவார்ந்த பல்கலைக் கழகம்" என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று; இல்லறம் தானே நல்லறங்களை உருவாக்கும் பாசறை!

இஸ்லாத்தில் இல்லறமே மனித நற்பண்பு களை உருவாக்கும் பயிற்சிக்  கூடமாகும்.பெற்றோர்களை பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கும்,ஒழுக்க மேம்பாட்டுக்கும் பயிற்ருனர்கள்! வீடே பள்ளிக்கூடம்.

"ஒருவருக்கு,உலகிலுள செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம் நற்குணமுள்ள மனைவியே" என்பது அண்ணலார் நபி(ஸல்) அவர்களின் திருவாக்கு. வீடு  செம்மையாக இருப்பதற்கு குடும்பத் தலைவியின் பங்கு மிக,மிக முக்கியமானது.இதனையே "மனிவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று சான்றோர் கூறுகின்றனர். அதனால்,கணவனான குடும்பத் தலைவரின் பங்கையும் நாம் குறைத்து மதிப்பிடல் இயலாது.குடும்பத்துக்குத்  தேவையானவற்றை தன உழைப்பின் மூலம் ஹலாலான வழியில் ஈட்டுவது கணவனின் கட்டாயக் கடமையாகும்.

அல்லாஹ்வின் திருத்தூதர்  (ஸல்) அவர்கள் 'ஓர் அடிமையின் விடுதலைக்காகவோ,அல்லது ஓர் ஏழைக்கு தர்மமாகவோ அல்லது உங்கள் குடும்பதாருக்ககவோ செலவிடப்படும் ஒரு பொற்காசு,இவற்றில் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காக செலவிட ஒரு பொற்காசே  அதிக நற்பயனை உடையாதாகும்" என்று கூறினார்கள்.
(நூல் : முஸ்லிம் 1818)

'குடும்பம்' எனப்படும் இல்லறத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது இஸ்லாம் மட்டுமே! இன்றைய நம் குடும்பங்களின் நிலை என்ன? என்பதை அலசி ஆராயுமிடத்து சொல்லாத கவலை ரேகைகளை நம் நெஞ்சங்களில் பதிவாகின்றன.

ஊடகங்களில் முக்கிய பங்கு வகிக்கும் தொலைக்காட்சிகள் நம் இல்லங்களில் ஊடுருவி விட்ட நிலையில்,மார்க்கக் கடமைகளான தொழுகை,நோன்பு முதலியன எல்லாம் வெறும் சடங்குகளாகி,உயிரற்ற இறை நம்பிக்கை உள்ளங்களில் ஊசலாடுகிறது; நகரத்து கடைத் தெருக்களில் புர்காக்கள் அதிக அளவில் நடமாடுகின்றன.அத்தியாவசிய தேவைகளுக்காக பெண்கள் வீட்டை விட்டு வெளியில் செல்வது மறைந்து,தேவையற்றவைகளை தேவைகளாக கருதி முஸ்லிம் பெண்கள் வெளிச் செல்வது அதிகரித்து விட்டது.

குறிப்பாக கன்னிப் பெண்கள் வீட்டில் இருப்பதே இல்லை.'கல்வி' பெறுவதற்காக,வீட்டை விட்டு வெளியில் செல்கின்ற  கன்னியர்களில் சிலர்,வேண்டாத வம்புகளை விலைக்கு வாங்கியன்றோ தாமதமாக வீட்டுக்குள் நுழைகின்றனர்.பெற்றோர்கள்  தம்  பிள்ளைகளின்   மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது!

இல்லறத்தை நல்லறமாக்கும் செயல்பாடுகள் நம் சமுதாயத்தின் உயர்வுக்கு வழி வகுக்கும்!இதில் சிறிதளவும் மெத்தனம் காட்டக்கூடாது.இஸ்லாத்தில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.கடமைகளை சரிவர நிறைவேற்றுவத்தின் மூலம் கண்ணியம் காத்து,கட்டுப்பாடினைப் பேணி வருவதால் மட்டுமே இல்லறம் நல்லறமாகும்.

'பெண்கள் சமுதாயத்தின் கண்கள்'! என்பதை 'இல்லறம்' மூலமே எடுத்துக் காட்ட முடியும்.நல்லறங்கள் யாவும் குடியிருக்கும் ஒரே இடம் இல்லறமாகும்.எல்லாம் வல்ல அல்லாஹ் தன் முழுமையான  பேரருளை நம் சமுதாயத்திலுள்ள,ஆண்-பெண் அனைவரின் மீதும் மழை போல் பொழிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
                ஆக்கம்,
     (புலவர்) S.ஜாபர் அலி,
             கும்பகோணம்.