மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைய
"அதிரை குரல்"வலைத்தளம் சார்பாக வாழ்த்துக்கள்!!!
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகின்றன. இந்த முடிவுகளை நமது அதிரை குரல் வலைத் தலத்தில் காணலாம். பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8.22 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3.53 லட்சம் பேர் மாணவர்கள். 4.07 லட்சம் பேர் மாணவிகள். 61,319 பேர் தனித் தேர்வர்களாகவும் தேர்வு எழுதினர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 40 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. இந்தப் பணியில் சுமார் 35,000 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்தப் பணி ஏப்ரல் 30ம் தேதி முடிவடைந்தது.
இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் முடிவுகள் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு முதல் முதலாக மாணவ- மாணவிகளுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பம்:
பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பம் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் 30ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை 3 நாட்கள் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், அரசு தேர்வுகள் இணை இயக்குனர் அலுவலகம் (புதுச்சேரி) ஆகியவற்றில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். டி.பி.ஐ. வளாகத்தில் விற்பனை கிடையாது.
விடைத்தாள் நகல் எந்த ஒரு பாடத்திற்கும் கேட்டு விண்ணப்பிக்கலாம். மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.550 கட்டணம் செலுத்த வேண்டும். இதர பாடங்களுக்கு தலா ரூ.275 கட்டணம் ஆகும்.
மறு கூட்டல், மறுமதிப்பீடு:
அனைத்து பாடங்களுக்கும் மறு கூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கு மறு கூட்டல் கோரி தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் கிடைத்த பிறகு விரும்பினால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
மறு கூட்டலுக்கு கட்டணம் முதன்மை மொழி, ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு தலா ரூ.305 கட்டணம். இதர பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டணம். விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கான கட்டண தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-6 என்ற பெயரில் எடுக்கப்பட்ட டி.டியை நேரில் ஒப்படைத்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அலுவலகங்களில் மட்டுமே நேரில் ஒப்படைக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற 5 நாட்களுக்குள் மறு மதிப்பீட்டுக்கு அல்லது மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மறுமதிப்பீடு கட்டணம் முதன்மை மொழி மற்றும் ஆங்கில மொழிப்பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1010 கட்டணம். மற்ற பாடங்களுக்கு தலா ரூ.505 கட்டணம். மறுகூட்டலுக்கு முதன்மை மொழி, ஆங்கிலம், உயிரியல் பாடங்களுக்கு ரூ.305 கட்டணம். இதர பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் ஆகும் என்று வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் நகல், மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் யாரும் மாணவர்களையோ அல்லது அவர்களின் பெற்றோர்களையோ தொடர்பு கொண்டு தவறான வழிகாட்டுதல் அளித்து மார்க்கை அதிகரித்து தருவதாக கூறினால், அதை நம்பி ஏமாறவேண்டாம் என்றும் வசுந்தராதேவி கூறியுள்ளார்.
Social Plugin