நாட்டின் 14-வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு நாடு முழுவதும் இன்று விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது.
குடியரசுத் தலைவராக இருக்கும் பிரதீபா பட்டீலின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜியும் பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் பி.ஏ. சங்மாவும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 776 பேரும் அனைத்து மாநில எம்.எல்.ஏக்கள் மொத்தம் 4120 பேருமாக 4896 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களின் மொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரம்.
நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் இரு அவை உறுப்பினர்களும் வாக்களித்தார்கள். எம்.எல்.ஏ.க்கள் அவர்களது மாநில பேரவைகளில் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. சொந்த மாநிலங்களில் வாக்களிக்க விரும்பினால் அனுமதிபெற்று எம்.பிக்களும் வாக்களிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. மொத்தம் 77 எம்.பி.க்களுக்கு மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது, இதேபோல் 7 மாநிலங்களைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களுக்கு நாடாளுமன்ற வாக்குச்சாவடியில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்புடன் நடந்தது. எம்.பிக்களும் எம்எல்ஏக்களும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
Social Plugin