Hot Posts

6/recent/ticker-posts

ஒலிம்பிக் ஹாக்கி: மிச்சமிருந்த மானமும் நேற்று போயிடுச்சி!!

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கலந்து கொள்ள தகுதி பெற்ற இந்திய அணியினர், கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து, அணிகள் பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி கலந்து கொண்டது. ஒலிம்பிக் தகுதி போட்டியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்று, இந்த வாய்ப்பை பெற்ற இந்திய அணி, பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது. மேலும் 8 முறை ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி மீண்டும் தங்கப்பதக்கம் வெல்ல கூட வாய்ப்புள்ளது என்று நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்தனர்.
ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பி பிரிவில் இந்தியா, ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, பெல்ஜியம், ஆகிய அணிகள் இடம் பெற்றன. இதில் பி பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் இந்தியா மோதியது.
இதில் 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது இந்தியா. இந்த நிலையில் இன்று அணிகள் பட்டியலில் 11 மற்றும் 12 இடத்திற்கான போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் 11வது இடத்தை பிடிக்க இந்திய அணி கடுமையாக போராடியது.
போட்டியின் 8வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஆன்ரூ கிரோச் முதல் கோலை அடித்தார். அதனை சமன் செய்யும் வகையில் இந்திய வீரர் சந்தீப்சிங் 14வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார். ஆனால் 34வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் தீமோத்தேயு ஒரு கோலை அடித்து அணிக்கு முன்னிலை அளித்தார்.
அதன்பிறகு 65வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜான்ஸ் ஒரு கோலை அடித்து போட்டியில் அணியின் வெற்றியை சாதகமாக்கினார். இந்த நிலையில் துடிப்புடன் செயல்பட்ட இந்திய வீரர் தரும்வீர் சிங் 67வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.
ஆனால் போட்டியின் முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்கா போட்டியில் வெற்றி பெற்றது. இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் எதிர்பார்த்து சென்ற இந்திய அணி, அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து அணிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து நாடு திரும்புகிறது.