நியூசிலாந்திற்கு எதிரான 2வது டுவென்டி20 போட்டிக்காக அமைக்கப்பட்ட சென்னை ஆடுகளம் சரியில்லை. இதனால் தான் ரன் வேகம் குறைந்து இந்தியா தோல்வியை சந்திந்தது என்று இந்திய கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி, இங்கு 2 போட்டிகள் கொண்ட டுவென்டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது டுவென்டி20 போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது.
இப்போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்து 168 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு சென்னை ஆடுகளத்தை கேப்டன் டோணி குறை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
சென்னை ஆடுகளம் போட்டியின் துவக்கத்தில் இருந்தது போல, இறுதிக்கட்டத்தில் இருக்கவில்லை. ஆடுகளத்தில் பந்து குறைந்த உயரத்திற்கு தான் எழும்பியது. இதனால் கடைசிக்கட்டத்தில் ரன் சேர்க்க திணறினோம்.
இந்தியா பேட்டிங் செய்த முதல் 10 ஓவர்கள் வரை ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தது. ஆனால் அதன்பிறகு ஆடுகளத்தின் தன்மை மாறியதால், ரன் சேர்க்க முடியவில்லை. விக்கெட்களை வீழ்த்த முயன்ற பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் ஒத்துழைத்தது.
இந்திய அணிக்கு விராத் கோஹ்லி சிறப்பான துவக்கத்தை அளித்தார். அவர் இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன்.
சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதன்மூலம் இலங்கையில் அடுத்த வாரம் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற பல சாதகமான சூழ்நிலைகள் உள்ளது. தற்போது இந்திய அணியில் அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் அதிகளவில் உள்ளனர். இதனால் இந்திய அணி சிறப்பான நிலையில் உள்ளது என்றார்.
Social Plugin