Hot Posts

6/recent/ticker-posts

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் : வானிலை மையம் தகவல்!!


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு, கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவ மழை நாளை (18ம் தேதி) தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே, சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. ஈரோடு, நீலகிரி, கன்னியாகுமரி, திருப்பூர்,தஞ்சாவூர் உள்ளிட்ட மாவடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 


இதன்காரணமாக ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.அதிரையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை  பெய்து வருகிறது. இன்று பிற்பகல் லேசான மழை பெய்தது. 


இதே போல சென்னையின் பல பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, சென்னையின் வடகிழக்கில் இருந்து மணிக்கு 10 முதல் 15 கி.மீ. வரையான வேகத்தில் மிதமான காற்று வீசும். வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ராயலசீமா, லட்சத்தீவு, கடலோர ஆந்திரா, தெற்கு உள்கர்நாடகா, வடக்கு கர்நாடகா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.