வெள்ளை மாளிகை கம்ப்யூட்டர்களுக்குள் ஹேக்கர்கள் புகுந்து விட்டனர். இருப்பினும் அந்த முயற்சி உடனடியாக தடுக்கப்பட்டு விட்டதாகவும், பெரிய அளவிலான பிரச்சினை ஏதும் இல்லை என்றும் வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் தலைவலியாக மாறி வருவது இந்த ஹேக்கர்கள்தான். கம்ப்யூட்டர்கள், இணையதளங்களுக்குள் ஊடுறுவி தகவல்களைத் திருடுவது, செயலிழக்க வைப்பது, வைரஸ்களைப் பரப்புவது என அட்டகாசம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதி உயர் பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட அமெரிக்க அதிபரின் மாளிகையான வெள்ளை மாளிகை கம்ப்யூட்டர்கள் மீதே ஹேக்கர்கள் கை வைத்து விட்டனர். இதனால் அமெரிக்க அரசு அதிர்ந்து போயுள்ளது. இருப்பினும் அப்படி எதுவும் நடக்கவில்லை, ஹேக்கர்களின் முயற்சிகளைத் தடுத்து விட்டோம் என்று அவசரமாக ஒரு அறிக்கையை விட்டுள்ளது வெள்ளை மாளிகை நிர்வாகம்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில்,ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டர் கட்டமைப்பைக் குறி வைத்து ஹேக்கிங் முயற்சி நடந்தது. அதை உடனடியாக கண்டுபிடித்துத் தடுத்து விட்டோம். மேலும் ஹேக்கிங் முயற்சி நடந்த கம்ப்யூட்டரை மட்டும் தனியாக பிரித்து வைத்து விட்டோம். இதன் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களுக்கும் ஹேக்கிங் பரவுவது தடுத்து நிறுத்தப்பட்டது.
சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டரிலிருந்து தகவல்கள் ஏதேனும் திருடப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நம்புகிறோம்.
சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டரில் என்ன இருந்தது என்பது குறித்து நான் சொல்ல முடியாது. இருப்பினும் அதி உயர் ரகசியத் தகவல்கள் அதில் இருக்காது என்று சொல்ல முடியும் என்றார் அவர்.
Social Plugin