தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா நேரில் 3வது முறையாக இன்று ஆஜரானார். இதையொட்டி தனிநீதிமன்றம் அமைந்திருக் கும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா 1991 1996ல் முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. இவ்வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளதால், வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
‘இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 313ன்படி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றத்துக்கு வரும் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து ஜெயலலிதாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனி நீதிமன்றத்தை தற்காலிகமாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை அருகில் உள்ள காந்திபவனுக்கு மாற்றம் செய்தனர்.
கடந்த அக்டோபர் 20, 21ம் தேதிகளில் ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். மொத்தம் 1384 கேள்விகள் தயார் செய்யப்பட்டன. அவற்றில் நீதிமன்றத்தில் ஆஜரான 2 நாட்களில் 567 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளித்தார். இன்னும் 817 கேள்விகள் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டி உள்ளன. அடுத்த விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு நீதிபதி மல்லிகார்ஜுனய்யா ஒத்தி வைத்திருந்தார். இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க மீண்டும் விலக்கு கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.குமார், ஜெயலலிதா நேரில் ஆஜராக அவகாசம் கொடுக்கும்படி மனு செய்தார். அதை ஏற்று கொண்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, நவம்பர் 22ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 25 கார்கள் புடைசூழ, சரியாக காலை 10.35 மணிக்கு தனி நீதிமன்ற வளாகத்துக்குள் வந்திறங்கினார் ஜெயலலிதா. பின்னர் நீதிபதி முன்பு 3வது முறையாக ஆஜராகி, அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஜெயலலிதா, சசிகலாவுடன் கோர்ட்டுக்கு அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சம்பத், ரமணா, கோகுல இந்திரா, 10 எம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதா சார்பில் ஆஜராகும் வக்கீல் பி.குமார், ராஜன், வக்கீல்கள் கந்தசாமி, சரவணகுமார் பால் கனகராஜ், விஜயராஜ், திவாகர் வி.எஸ்.சுந்தர் உள்பட 12 வக்கீல்கள் கோர்ட்டுக்குள் சென்றனர். அரசு சார்பில் வக்கீல் ஆச்சார்யா, சந்தேஷ் சவுதா ஆகியோர் ஆஜரானார்கள். ஜெயலலிதா கோர்ட்டுக்கு வருவதையொட்டி எச்.ஏ.எல். விமான நிலை யம் முதல் பரப்பன அக்ரஹாரா சிறை வரை பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மாநகர போலீஸ் கமிஷனர் ஏற்பாடு செய்திருந்தார். சிறை வளாகத்தில் அதிரடிப் படை போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். சிறை நுழைவாயில் பகுதியில் உள்ள சாலையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டார்.ஜெயலலிதாவை அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், மதுரை மேயர் ராஜன் செல்லப்பா, கோவை மேயர் செ.ம.வேலுசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வழியனுப்பினர். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் முன்னதாகவே பெங்களூர் வந்துவிட்டனர்.
Social Plugin