தமிழகத்தில் பஸ் கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகங்கள், பஸ்கள் என பொது இடங்களில் இதை பற்றிதான் மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு ‘4257‘ பதிவெண் கொண்ட 70 A தொடர் பஸ் (டிரெய்லர்) நேற்று மாலை 4.30 மணிக்கு சென்றுகொண்டிருந்தது. பயணிகள் பஸ் கட்டண உயர்வு பற்றி பேசிக் கொண்டிருந்தனர். கோயம்பேட்டில் ஏறிய 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நம்ம கஷ்டத்த பற்றி யோசிக்காம விலைய ஏத்திட்டாங்க. இத போயி யாருக்கிட்ட சொல்றது என்று சக பயணிகளிடம் ஆதங்கத்துடன் பேசிக் கொண்டிருந்தார். திருமுல்லைவாயலுக்கு முன்பு அவர் இறங்க வேண்டிய இடம் வந்தது. உட்கார்ந்திருந்த அவர் எழுந்து படிக்கட்டு அருகே வந்தார். பஸ் கட்டண உயர்வை பற்றி அப்போதும் பேசிக் கொண்டிருந்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த கண்டக்டர், இங்க வந்து எதுக்கு பேசுற. எங்க போயி கேட்கணுமோ அங்க கேட்க வேண்டியதுதானே என்று கூறி அந்த பெண்ணின் கன்னத்தில் பளார் என அறைந்தார். சக பயணிகள் அதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். டிரெய்லர் பகுதியில் இருந்த அந்த கண்டக்டரை பார்த்து ஒரு பயணி,அவங்க பேசினா பொம்பளனு கூட பாக்காம கன்னத்துல அடிக்கிறதா? என்றார். அதை கேட்டு மேலும் ஆத்திரம் அடைந்த கண்டக்டர்,உனக்கும் உதை வேணுமா. ரொம்ப பேசினா, வண்டிய போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட்டச் சொல்வேன். எல்லாரயும் உள்ள போட்டா சரியா இருக்கும் என்று கூறினார்.. கண்டக்டரின் இந்த அடாவடியால் ஏற்கனவே ஒரு பெண் அவமானத்துடன் பஸ்சில் நிற்பதை பார்த்து மற்றவர்களும் கப்சிப் ஆகிவிட்டனர். அதற்குள், ஸ்டாப் வர அடி வாங்கிய பெண் அவமானத்தில் தலைகுனிந்து சென்றார்.டிக்கெட் வாங்கும் போது தகராறு செய்திருந்ததால் கூட, கண்டக்டர் ஆத்திரத்தில் அடித்துவிட்டார் என்று சமாதானம் சொல்லலாம். ஆனால், சக பயணிகளிடம் கஷ்டத்தை பற்றி பேசியதற்கே கண்டக்டர் அடித்தது அராஜகம் என்று மற்ற பயணிகள் பேசிக் கொண்டனர்.
நன்றி!
M.இத்ரீஸ் அஹமது.
Social Plugin