மதிப்பெண் பட்டியலை தொலைத்த மாணவர்களுக்கு வழங்கப்படும் சிசிஎம் என்ற சான்றொப்பமிட்ட மதிப்பெண் பட்டியலை ரத்து செய்ய தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு மற்றும் +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் மதிப்பெண் பட்டியல் வழங்குகிறது. இந்த மதிப்பெண் பட்டியல்தான் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துக்கும் அடிப்படையானது. மதிப்பெண் பட்டியல் தொலைந்துவிட்டாலோ, தீயில் எரிந்து, மழையில் நனைந்து சேதமடைந்தாலோ மாற்று மதிப்பெண் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கி வருகிறது. ஆனால், மாற்று மதிப்பெண் பட்டியல் பெறுவதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் ஆகும்.
அதுவரை 6 மாதத்துக்கு செல்லுபடியாகும் வகையில் சான்றொப்பமிட்ட மதிப்பெண் பட்டியல் (சிசிஎம்) கொடுப்பார்கள். இன்டர்வியூ மற்றும் மேற்படிப்புக்கு செல்லும்போது இதை உண்மையான மதிப்பெண் பட்டியலுக்கு இணையாக கருதி ஏற்றுக் கொள்வார்கள். சிசிஎம் பெற வேண்டும் என்றால் அரசு தேர்வுகள் இயக்ககம் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மாணவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் வாங்கி, வங்கியில் அதற்கான கட்டணமாக ரூ.305 செலுத்திய ரசீது இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதும் சிசிஎம்மை தேர்வுத்துறை உடனே வழங்கும்.
சிசிஎம் பெற்ற மாணவர்கள் மாற்று மதிப்பெண் பட்டியல் பெற, போலீசில் புகார் செய்து அதன் நகல் மற்றும் தாசில்தாரிடம் சான்று பெற்று கட்டணமாக ரூ.505 செலுத்திய ரசீதுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அவர் அந்த விண்ணப்பத்தை தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்புவார். அந்த விண்ணப்பம் மீது விசாரணை நடத்தி, அரசு கெஜட்டில் விவரம் வெளியிடப்படும். அதன் பிறகே மாற்று மதிப்பெண் பட்டியல் (டூப்ளிகேட்) கிடைக்கும். படிப்படியாக இந்த பணிகள் நடக்க 6 மாதம் ஆகும்.
மாற்று மதிப்பெண் பட்டியல் கேட்டு நாளொன்றுக்கு சுமார் 50 விண்ணப்பங்கள் தேர்வுகள் இயக்ககத்துக்கு வருகின்றன. இப்படி வந்த விண்ணப்பங்களே ஏராளமான கிடப்பில் உள்ளன. இந்நிலையில், சிசிஎம் சான்று வழங்குவதை ரத்து செய்துவிட்டு, டூப்ளிகேட் மதிப்பெண் பட்டியலையே உடனடியாக வழங்க தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. இதற்காக ஒரு திட்டம் தயாரித்து அரசின் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளது. இது, மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிசிஎம் வழங்குவதை ரத்து செய்துவிட்டால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். சிசிஎம் இல்லாமல் மாற்று மதிப்பெண் பட்டியலை ஒரு மாதத்துக்குள் கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாற்று மதிப்பெண் பட்டியல் கேட்பவர்களின் விவரங்களை ஆய்வு செய்து, சரி பார்த்துதான் பட்டியல் வழங்க வேண்டும். அதற்கு காலஅவகாசம் தேவை என்பதால் உடனடியாக அதை தருவது சிரமமான விஷயம்.
இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Social Plugin