முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழர்களை தாக்கும் கேரளாவை கண்டித்து கம்பத்தில் இன்று ஒன்றரை லட்சம் பேர் திரண்டு பிரமாண்ட பேரணி நடத்தினர். தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்தால் லட்சக்கணக்கானோர் திரண்டு கேரளாவை முற்றுகையிடுவோம் என்று எச்சரித்துள்ளனர். முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள, மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பொதுமக்கள் கேரள எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து கம்பம் பகுதியை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள, மத்திய அரசுகளுக்கு அமைதியான வழியில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்தனர். அதன்படி, இன்று பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க வலியுறுத்தி கம்பத்தில் வேளாளர், விஸ்வகர்ம மகாஜன சங்கங்கள், ஒக்கலிகர், குலாலர், கள்ளர் சமூகத்தினர், முஸ்லிம் ஜமாத்தார்கள், கம்பம் நகர கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், கம்பம் பள்ளத்தாக்கு ரேமா எழுப்புதல் ஊழியர் சங்கங்கள் சார்பில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் குடும்பத்துடன் திரண்டு அமைதி பேரணி நடத்தினர்.
கம்பம் மெட்டு சாலையில் துவங்கி, சிக்னல் பகுதி, காந்தி சிலை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வழியாக பேரணி சென்றது. அப்போது, கேரள முதல்வர் உம்மன்சாண்டியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ‘‘இங்கு திரண்ட கூட்டம் கேரளாவுக்குள் புகுந்திருந்தால் அவர்களால் சமாளிக்க முடியாது. தமிழக சட்டசபையை கூட்டி கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்துகிறோம். தொடர்ந்து சீண்டினால் கேரளாவுக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டோம். தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்தால் ராணுவமே வந்து தடுத்தாலும் கவலைப்படாமல் லட்சக்கணக்கானோர் திரண்டு கேரளாவை முற்றுகையிடுவோம்’’ என்று ஆவேசமாக எச்சரித்தனர்.
Social Plugin