நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே 41 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் நேற்று ஒரு படகு அத்துமீறி நுழைந்தது. இது இந்திய கடலோர காவல்படையின் ரேடார் கருவி மூலம் தெரிந்தது. இந்திய கடல் எல்லைக்குள் 8 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த படகை கடலோர காவல்படையினர் சுற்றிவளைத்தனர். அதில் இருந்த இலங்கையை சேர்ந்த மீனவர்கள் ஸ்டீபன் பெர்ணாண்டோ (43), எம்யூ ஜே. பெர்னாண்டோ (43), டபிள்யூ ஜேஎன் பெர்னாண்டோ (47), ராஜபக்ஷே சம்பாலா (44), ஹர்ஷாஹெல்சன் (17) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மீனவர்களை புதுச்சேரி துறைமுகத்துக்கு நேற்றிரவு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் புதுச்சேரி போலீசாரிடம் இலங்கை மீனவர்களை ஒப்படைத்தனர். அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. படகில் இருந்த 460 கிலோ மீன் பறிமுதல் செய்யப்பட்டு, புதுச்சேரி மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இன்று காலை 5 மீனவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபற்றி இலங்கை தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டில் இருந்து பதில் கிடைத்ததும் மீனவர்களை விடுவிப்பது குறித்து முடிவு செய்ய முடியும் என்று கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.
Social Plugin