சசிகலா, நடராஜன், சுதாகரன் உள்பட அவர்களது குடும்பத்தினர் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அவரது தோழி சசிகலாவுக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர் ஆஜராகி வந்தனர். சுதாகரன் தனியாக வந்து ஆஜரானார். ஜெயலலிதாவிடம் விசாரணை முடிந்ததும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தனியாக ஆஜராகினர். அப்போது ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட சிலர், சசிகலாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு மேலும் அதிகரித்தது. பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா, போயஸ் கார்டனுக்கு செல்லாமல் தனது சகோதரி மகன் பாஸ்கரன் வீட்டுக்கு சென்று தங்கினார். இந்நிலையில், சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் 12 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ஜெயலலிதா இன்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
1. சசிகலா (தலைமை செயற்குழு உறுப்பினர்)
2. எம்.நடராஜன்
3. திவாகரன் (மன்னார்குடி)
4. டி.டி.வி.தினகரன்
5. வி.பாஸ்கரன்
6. வி.என்.சுதாகரன்
7. டாக்டர் எஸ்.வெங்கடேஷ்
8. எம்.ராமச்சந்திரன்
9. இராவணன்
10. மோகன் (அடையாறு)
11. குலோத்துங்கன்
12. ராஜராஜன்
ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர். அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடராஜன், சசிகலாவின் கணவர் ஆவார். திவாகரன், பாஸ்கரன், சுதாகரன், வெங்கடேஷ், ராவணன், ராமச்சந்திரன் ஆகியோர் சசிகலா மற்றும் நடராஜனின் நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள். மோகன், மிடாஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தபோது, கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். ஆனாலும், அவர்கள் கட்சியை விட்டு விலக்கப்படவில்லை. இப்போது அதிரடியாக அவர்களை கட்சியில் இருந்தே ஜெயலலிதா நீக்கி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Social Plugin