Hot Posts

6/recent/ticker-posts

பெங்களூர் ஐஐடியில் பப்ளிக் பாலிசி மேனேஜ்மென்ட் !



 இந்தியாவில் உள்ள பெரும்பாலான கல்வி முறைகளை பொறுத்தவரை எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கிறோமோ அந்த துறையில்தான் பணிவாய்ப்பை பெற முடிகிறது. ஆகவே மேல்நிலைக்கல்வியிலேயே திட்டமிடல் அவசியமாகிறது. ஆனால் ஒரே படிப்பில் பல்துறையில் பணிவாய்ப்பை பெறும் விதமாக உள்ளது பப்ளிக் பாலிசி அண்ட் மேனேஜ்மென்ட் படிப்பு. பப்ளிக் பாலிசி அண்ட் மேனேஜ்மென்ட்டில் முதுகலை படிக்கும் போது கொள்கை வகுப்பது, திட்ட மதிப்பீடு, நிர்வாகம், அரசியல் குறித்து கற்றுத் தரப்படுகிறது. தேசிய அளவில், மாநில அளவில் மட்டுமில்லாமல் உள்ளாட்சி அமைப்புகளில்கூட கொள்கை திட்டமிடலில் இவர்கள் உதவலாம். பொது நிர்வாகம் தொடர்பான படிப்புகளுடன் ஒப்பிடும் போது பப்ளிக் பாலிசி அண்ட் மேனேஜ்மென்ட் படித்தால் அரசு, தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இதற்கு தேவையான அறிவும், திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

சுற்றுலா, போக்குவரத்து, நகர திட்டமிடல், பொதுத் துறை, தனியார் துறை, கூட்டுறவு, வீட்டு வசதி, சுகாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் இவர்கள் பணியாற்றலாம். அரசின் கொள்கை முடிவு களை பாதிக்கும் பொருளாதார, சமூக, அரசியல் நிர்பந்தங்கள் குறித்து இவர்கள் ஆராய்ச்சி செய்கின்றனர். கடந்த கால சம்பவங்களை புரிந்து கொண்டு நிகழ்கால தேவைகளுக்கு ஏற்ப புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதே இவர்களது பணி. அரசுத் துறையுடன், தனியார் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இடையேயான உறவுகளை மேம்படுத்த உதவுகின்றனர். கிராஜுவேட் மேனேஜ்மென்ட், கிராஜுவேட் மேனேஜ்மென்ட் டிரெய்னி, பாலிசி அண்ட் பிளானிங் ஆபீசர், பைனான்ஸ் அண்ட் கமர்ஷியல் மேனேஜர் போன்ற பல வாய்ப்புகள் பாலிசி மேனேஜ்மென்ட் படிப்பவர்களுக்கு உள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாளர்களாகவும், அரசியல் ஆலோசர்களாகவும் இவர்கள் பணியாற்றலாம். பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் பப்ளிக் பாலிசி அண்ட் மேனேஜ்மென்ட் முதுகலை படிப்பாக கற்றுத் தரப்படுகிறது. இது தொடர்பான விவரங்களை ஐஐடி பெங்களூர் கல்வி நிறுவன இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.