Hot Posts

6/recent/ticker-posts

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்:ஆஸ்திரேலியா அணியை சமாளிக்குமா இந்தியா?



 டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் முதல் டெஸ்ட் மெல்போர்னில் நாளை (26-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. தற்போது முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அனைத்து வீரர்களும் முழு திறமையுடன் ஆட வேண்டும்.
பேட்டிங், வேகப்பந்து வீச்சை பொறுத்து இந்திய அணியின் நிலை உள்ளது. ஷேவாக்கும், காம்பீரும் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க வேண்டும். டிராவிட், தெண்டுல்கர், லட்சுமண் ஆகியோர் மிடில் ஆர்டரில் நிலைத்து நிற்க வேண்டும்.
6-வது வீரர் வரிசைக்கான இடத்தில் இடம் பெறுவதில் வீராட் கோலி, ரோகித் சர்மா இடையே போட்டி நிலவுகிறது. பயிற்சி ஆட்டத்தில் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். கோலி சதம் அடித்து இருந்தார். போட்டி தொடங்குவதற்கு முன்பே யார் விளையாடுவார் என்பது பற்றி முடிவு தெரியும்.
மெல்போர்ன் ஆடுகளம் முதல் நாளில் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இதனால் வேகப்பந்து வீரர் தேர்வு முக்கியமானது. ஜாகீர்கான், இஷாந்த் சர்மா ஆகியோரை நம்பி வேகப்பந்து வீச்சு உள்ளது. ஆனால் இருவரது உடல் தகுதிதான் கவலையை ஆழ்த்துகிறது.
இருவரும் முழு உடல் தகுதியுடன் பந்துவீசினால் மட்டுமே சாதகமாக அமையும். இந்த இருவரும் இடம் பெறும் பட்சத்தில் 3-வது வேகப்பந்து வீரராக உமேஷ் யாதவ் ஆடுவார்.
அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒஜா, தமிழக வீரர் அஸ்வின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இருவரில் ஒருவர்தான் தேர்வு பெறுவார். அது யார் என்பதும் இன்னும் முடிவாகவில்லை. அஸ்வினைவிட ஒஜா அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகம்.
ஆஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடக் கூடியது. இதனால் அந்த அணியை சமாளிக்க இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும்.
ஆஸ்திரேலிய அணியில் வாட்சன், ஜான்சன், ஹாரிஸ் ஆகியோர் காயத்தால் ஆடவில்லை. முன்னாள் கேப்டன் பாண்டிங், மைக் ஹஸி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லை. இதை இந்திய பவுலர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் தொடக்க வீரர் வார்னர் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். புதுமுக வீரர் எட்கோவன், மார்ஷ், கேப்டன் மைக்கேல் கிளார்க் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் பலமே வேகப்பந்து வீச்சுதான். பீட்டர் சிடில், பேட்டின்சன், ஹில்பென்ஹாஸ் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் முத்திரை பதிக்க கூடியவர். சுழற்பந்து வீரரில் நாதன் லயான் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 28 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் தோற்றது என்றாலும் தொடரை சமன் செய்தது.
இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. இந்திய அணி இங்கிலாந்து பயணத்தில் 4 டெஸ்டிலும் தோற்று மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. அதுபோன்ற நிலைமை ஆஸ்திரேலிய பயணத்தில் ஏற்பட்டு விடக்கூடாது.
இந்திய அணி கடைசியாக 2007-08-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 4 டெஸ்ட் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த தொடர் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.