108 இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
108 இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தமிழக மேற்கு மாவட்டங்களான கோவையில் 54,084 பேரும், நீலகிரியில் 9599, திருப்பூரில் 34,960, ஈரோட்டில் 33,943, அரியலூரில் 19,759, தர்மபுரியில் 25,111, சேலத்தில் 49,048, பெரம்பலூரில் 19,340, நாமக்கல்லில் 21,143, கிருஷ்ணகிரியில் 23,477, திருச்சியில் 56,079, கரூர் மாவட்டத்தில் 16,422 பேரும் மீட்கப்பட்டனர். 3,26,965 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மொத்தம் 135 ஆம்புலன்ஸ் இயங்கி கொண்டிருக்கிறது. தினமும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். ஓடும் ஆம்புலன்சில், 1500க்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் சேவை மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேற்கு மாவட்டங்களில், கூடுதலாக 53 ஆம்புலன்ஸ்கள் இயக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பச்சிளம் குழந்தைகளை மீட்க ‘இங்குபேட்டர்‘, செயற்கை சுவாச கருவி உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தனி ஆம்புலன்ஸ் இயக்கப்படும். நோயாளிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பது மட்டுமே இதுவரை நோக்கமாக இருந்தது. இனி, அரசு மருத்துவமனைகளில் இருந்து வேறு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை இடமாற்றம் செய்யவும் ஆம்புலன்ஸ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எங்கே எந்த ஆம்புலன்ஸ் சென்றுள்ளது என கண்டறிய தொழில்நுட்ப திட்டம் கொண்டு வரப்படும். இதன்மூலம் நோயாளிகளை உடனடியாக குழப்பமின்றி மீட்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘டோலி‘ இனி இருக்காது: வால்பாறை, டாப்சிலிப், ஆனைகட்டி, பில்லூர், நீலகிரி, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் 70க்கும் அதிகமான மலை கிராமங்கள் உள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 20 சதவீத கிராமங்கள் வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கே நோயாளிகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டால் மூங்கில் குச்சியில் தொட்டில் போல் (டோலி) கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் நிலை இருக்கிறது. இதை தவிர்க்க, வனம் மற்றும் மணல் பாங்கான இடங்களுக்கு சென்று வரும் வகையில் ‘டிரக் ஆம்புலன்ஸ்‘ இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Social Plugin