காந்திபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பஸ்கள். பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள போலீசார்.
கேரள எல்லையோர பகுதிகளில் தமிழக பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவத்தால் கோவையில் இருந்து கேரள மாநிலங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதேபோல் கேரள அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. முல்லை பெரியாறு பிரச்னை இருந்தும் கோவை, வாளையார் வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகன போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. கடந்த மூன்று நாட்களாக கேரள எல்லைக்குள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வரும் வன்முறை கும்பல் ஆங்காங்கே தமிழக வாகனங்களை வழிமறித்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று மட்டும் தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்ற 22 பேருந்துகள், தமிழக அரசுக்கு சொந்தமான 4 அரசு பேருந்துகள் மீது கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன.
இந்நிலையில், கேரளாவில் தொடர் வன்முறை சம்பவங்களால் தமிழகத்தில் இருந்து அரசு போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. வழக்கமாக கோவையில் இருந்து 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து பாலக்காட்டுக்கு இயக்கப்படும். இன்று காலை அந்த பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் கேரளாவில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ்களும் நிறுத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து திங்கட்கிழமையான இன்று கோவையில் இருந்து பாலக்காட்டுக்கும், அங்கிருந்து கோவைக்கும் வந்து செல்லும் பலர் பாதிக்கப்பட்டனர். தமிழக எல்லையான க.க.சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்பினர் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. தாராபுரம் பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வரும் 21ம் தேதி மதிமுக, பெதிக, இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு விவசாய அமைப்புகள் சாலை மறியல் நடத்துகின்றன. கேரளாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதை யொட்டி, கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்களை இயக்க டிரைவர்கள் மறுத்தனர்.
Social Plugin