வயதானவர்கள், பெண்களை அதிகம் பாதிப்பது மூட்டு வலி. அதிக எடை, கால்சியம் குறைபாடு, மெனோபாஸ் என பல காரணங்கள் இருந்தாலும் பனி காலத்தில் கால்வலி, எலும்பு சார்ந்த வலிகள் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும்.பனிக்காலத்தில் ஏற்படும் மூட்டு வலியை சமாளிப்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேயன். உடலின் எலும்புகளை இணைப்பது மூட்டுகள். நடப்பது, ஓடு வது, விளையாடுவது என உடல் இயக்கத்தை எளிதாக்கும் வேலையை மூட்டுகள் செய்கின்றன. மூட்டு நாண்களை அளவுக்கு அதிகமாக உபயோகித்தல் மற்றும் கிழிந்து போவதால் மூட்டு நாண் பிடிப்புகள் ஏற்பட்டு வலியை ஏற்படுத்துகிறது. முழங்கால் மூட்டு மற்றும் பாதத்திலும் இது போன்ற பிரச்னை ஏற்படலாம். மூட்டுப்பை அலர்ஜி ஏற்படும் போதும் மூட்டுப் பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எலும்பு, தசைநாண் மற்றும் தசை ஆகியவை மூட்டுகளுடன் இணையும் பகுதியில் அமைந்துள்ளது. மூட்டுகளின் அசைவால் ஏற்படும் அதிர்வுகளில் இருந்து காக்கும் வேலையை மூட்டுப்பைகள் செய்கின்றன. மூட்டுப் பைகளில் அலர்ஜி ஏற்படுவதால் அசைவு மற்றும் அழுத்தத்தின் போது வலி ஏற்படும். தோள்பட்டை, முழங்கை, இடுப்பு மூட்டுகளில் இந்த அலர்ஜி அதிகளவில் ஏற்படும்.
தசை நார்களில் உண்டாகும் அலர்ஜி காரணமாகவும் மூட்டுகளில் வலி, பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வலியை துவக்கத்தில் கவனிக்காமல் விட்டால் 3 மாதங்களுக்கு பின்னர் உடல் முழுவதும் வலி ஏற்படலாம். கால்களில் தசைப்பிடிப்பு, தசைகள் எலும்புகளு டன் இணையும் பகுதிகளில் தொடு வலி, தலைவலி மற்றும் இடுப்பு வலியும் ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம் மற்றும் உடல் அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகளவில் வருகிறது. ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்குகிறது. இவர்கள் அதிக பதற்றத்தை விட்டு வேலைகளை நிதானமாக செய்யலாம். ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வதை தவிர்க்கலாம். சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் போன்ற பயிற்சிகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றலாம். வயிற்று தசைகளுக்கு அவ்வப்போது பயிற்சி கொடுக்கலாம். வலிக்காக அன்றாட வேலைகளை முற்றிலும் தவிர்ப்பதும் தவறானதே.
மூட்டுப் பிறழ்வு, மூட்டு நழுவுதல் போன்ற காரணங்களால் முழங்கை, முன்கை பகுதியில் கடும் வலி ஏற்படும். திடீரென முழங்கையை நீட்டும் போதும் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. முழங்கைப்பகுதி ஒழுங்கற்றுக் காணப்படுவது மற்றும் அதிக வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும். குளிர் காலத்தில் மணிக்கட்டு, கை விரல்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மணிக்கட்டு, விரல்களுக்கு அதிகம் வேலை கொடுப்பது, காயம் காரணமாக வலி ஏற்படலாம். மூட்டு வலிக்கான அறிகுறிகள் தென்பட்டால் டாக்டரின் ஆலோசனைப்படி மருத்துவம் செ ய்து கொள்ள வேண்டியது அவசியம். சாதாரண மூட்டு பிரச்னைகூட பனிக்காலத்தில் அதிகரிக்கும். வலிகளையும் ஏற்படுத்தும். அதற்கான பாதுகாப்பு முறை மூலம் பனிக்கால மூட்டு வலியை தவிர்க்க முடியும்.
பாதுகாப்பு முறை: மூட்டு வலியைக் குறைக்க மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். மூட்டுகளை அழுத்தி அசைவைக் குறைக்கும் எலாஸ்டிக் கட்டு போடலாம். மூட்டுகளில் வலி இருக்கும்போது உடற்பயிற்சியை தவிர்க்கவும். ஒரே வேலையை தொடர்ந்து செய்வதை விட்டு இடையில் சிறிது ஓய்வெடுத்து பின்னர் வேலை செய்யலாம். அதிக எடை தூக்குவதை தவிர்க்கவும். குளிர் காலங்களில் அதிகாலை குளிரில் வெளியில் வருவதை தவிர்க்கவும். வெளியில் வர நேர்ந்தால் மப்ளர், சாக்ஸ், ஷூ பயன்படுத்தி கால்கள், கழுத்து பகுதி கதகதப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். குளிரால் மூட்டு வலி ஏற்பட்டால் அப்பகுதியில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். அதிக எடையை குறைப்பதும் மூட்டுவலியை நிரந்தரமாக வழியனுப்ப ஒரு வழியாகும். கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் எலும்பு வலிமை அடையும். குளிர் காலத்தில் மூட்டுக்கான பயிற்சிகளை செய்வதன் மூலம் வலி ஏற்படுவதை தடுக்கலாம்.
Social Plugin