ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் 2007-ம் ஆண்டு மே 18-ம் பைப் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல முஸ்லிம் இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பலர் சித்ரவதைக்கு ஆளானார்கள்.
இதுகுறித்து விசாரணை நடத்திய தேசிய சிறுபான்மை கமிஷன், போலீஸ் சித்ரவதைக்கு ஆளான 16 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும் என மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவும் சிபாரிசு செய்தது. இதை ஏற்றுக் கொண்ட ஆந்திர அரசு, இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது. அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நஷ்டஈடு தரவும் ஒப்புக் கொண்டது. போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்களில் விடுவிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலை வழங்கும் விழா நேற்று ஐதராபாத்தில் நடந்தது. மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது அப்துல்லா, இளைஞர்களுக்கு காசோலைகளையும், நற்சான்றுகளையும் வழங்கினார்.
Social Plugin