டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்திய அணியின் நிலைமை ஆஸ்திரேலியாவில் மிகவும் பரிதாபமாக உள்ளது. 4 டெஸ்ட் தொடரில் மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்ட்டில் 122 ரன்னிலும், சிட்னியில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்னிலும் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இதிலும் தோற்றால், தொடரை இழந்து விடும். தொடரை சமன் செய்ய பெர்த் டெஸ்டில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இதனால் இந்திய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.
மெல்போர்ன், சிட்னி ஆடுகளத்தை விட பெர்த் மைதானம் அதிகமாக பவுன்ஸ் ஆகும். உலகின் அதிவேக ஆடுகளம் என்று பெர்த் மைதானம் அழைக்கப்படுகிறது. 2007-08ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி இதே மாதிரி தான் மெல்போர்ன், சிட்னி டெஸ்டில் தோற்றது. ஆனால் பெர்த்தில் நடந்த 3-வது டெஸ்ட்டில் 72 ரன்னில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதே மாதிரியான எழுச்சியை டோனி தலைமையிலான அணி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.
அதே நேரத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தோல்வி நேர்ந்தது போல இந்திய அணிக்கு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இங்கிலாந்து பயணத்தில் இந்தியா தான் மோதிய 4 டெஸ்டிலும் தோற்றது. வெளிநாட்டு மைதானத்தில் இந்திய அணி தொடர்ந்து 6 தோல்வியை தழுவியுள்ளது. தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாய இந்திய அணிக்கு உள்ளது.
டிரா செய்ய இந்திய வீரர்கள் கடுமையாக போராடுவது அவசியமாகிறது. பெர்த் டெஸ்டில் வீரர்கள் தேர்வு மிகவும் முக்கியமானது. ரோகித் சர்மாவை சேர்த்தால் யாரை நீக்குவது என்ற குழப்பம் உள்ளது. லட்சுமண் அல்லது வீராட் கோலி நீக்கப்படலாம். லட்சுமண் சீனியர் வீரர் என்பதால் அவர் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவே.
கோலிக்கு மீண்டும் இன்னொரு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் ரோகித்சர்மா இடம் பெற இயலாது. ஜாகீர்கான் முதல் முறையாக பெர்த் ஆடுகளத்தில் விளையாடுவார். சிட்னி டெஸ்டில் இந்திய அணியின் பந்துவீச்சு எடுபடவில்லை. இதனால் ஜாகீர்கான், இஷர்ந்த் சர்மா, உமேஷ்யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீச வேண்டும். சுழற்பந்து வீரர்களில் அஸ்வினுக்கு பதிலாக ஒஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பவுலிங்கில் சம பலத்துடன் உள்ளது. கேப்டன் கிளார்க் சிட்னி டெஸ்டில் டிரிபிள் செஞ்சூரி அடித்தார். பாண்டிங், மைக் ஹஸ்சி, எட்கோவன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் பேட்டின்சன் காயம் காரணமாக பெர்த் டெஸ்டில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ரியான் ஹாரிஸ் அல்லது மைக்கேல் ஸ்டார்க் இடம் பெறலாம். 4 வேகப்பந்து வீரர்கள் களம் இறங்கினாலும் இந்த இருவருமே சேர்க்கப்படுவார்கள்.
ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்டிலும் சென்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Social Plugin