Hot Posts

6/recent/ticker-posts

கியாஸ் டேங்கர் லாரிகள் இன்று நள்ளிரவு முதல் ஸ்டிரைக்?



தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 3500-க்கும் மேற்பட்ட லாரிகள் இருக்கின்றன.
 
இந்த லாரிகள் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் கியாஸ் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
 
இந்த ஒப்பந்தம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் ஆகும். கடந்த அக்டோபர் மாதம் 31-ந்தேதியுடன் கியாஸ் டேங்கர் லாரிகளின் 3 ஆண்டுக்கான ஒப்பந்த காலம் முடிவடைந்தது.
 
இதற்கிடையில் ஆயில் நிறுவனங்கள் வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும். அதோடு கூடுதலாக 600 டேங்கர் லாரிகளையும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
 
இது குறித்து ஆயில் நிறுவனத்தினருடன், கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
 
இந்த நிலையில் தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் வாடகையை கூடுதலாக உயர்த்தி தருதல் மற்றும் கூடுதலாக 600 டேங்கர் லாரிகளை இணைத்து கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கை வைக்கப்பட்டது.
 
இந்த கோரிக்கையை 12-ந்தேதிக்குள் ஆயில் நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும். அவர்கள் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இன்று (12-ந்தேதி) நள்ளிரவு முதல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.
 
இந்த நிலையில் நேற்று சென்னையில் ஆயில் நிறுவனத்துடன் தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதிலும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இன்றும் ஆயில் நிறுவனத்துடன் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்தபடி, இன்று நள்ளிரவு முதல் தென்மண்டல அளவிலான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.