சென்னையிலும் புறநகர்களிலும் 2 மணி நேர மின்வெட்டு, மாநிலத்தின் பிற பகுதிகளில் 4 மணி நேரம் மின்வெட்டு என்று மின்வாரியம் அறிவித்து அது நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததாக கூறப்பட்டாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
புதிய மின்தடை திட்டத்தை நேற்று முதல் மின்வாரியம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அமல்படுத்தியுள்ளது. அதன்படி இதுவரை ஒரு மணி நேர மின்வெட்டை சந்தித்து வந்த சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 2 மணி நேரமாக மின்வெட்டு உயர்த்தப்பட்டது. இதை சரியாக அமல்படுத்தியுள்ளனர்.
மாநிலத்தின் பிற பகுதிகளில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த 8 மணி நேர மின்வெட்டு என்பது 4 மணி நேரமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இங்குதான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டின் அளவு தொடர்ந்து அப்படியேதான் இருப்பதாக மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.
உதாரணத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் கோடி மாவட்டங்களின் நகரப் பகுதிகளில் தொடர்நது 8 மணி நேரமின்வெட்டே அமல்படுத்தப்படுகிறது. அதேசமயம் கிராமப்புறங்களில் இதை விட கூடுதலான மின்வெட்டை அமல்படுத்துவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல மதுரையிலும்,அதிரையிலும் இதுவரை 8 மணி நேரமாக இருந்த மின்வெட்டு 5 மணி நேரமாக குறைந்துள்ளதாம். அதாவது மின்வாரியம் சொன்ன 4 மணி நேர மின்வெட்டாக அது இன்னும் குறைக்கப்படவில்லை.
இதே நிலைதான் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. சில இடங்களில் மட்டுமே நான்கு மணி நேர மின்வெட்டு அமலாகியுள்ளதாம். பெரும்பாலான இடங்களில் 5 மணி நேரம், 6 மணி நேரம் என்றுதான் உள்ளதாம். பெரும்பாலான இடங்களில் 8 மணி நேரமே தொடர்கிறதாம்.
ஏன் இந்தக் குழப்பம் என்று மின்வாரியத் தரப்பி்ல விசாரித்தபோது, மின்வாரியம் மின் தடை குறைப்பை அறிவித்துள்ள போதிலும் அதுதொடர்பான உத்தரவும், சுழற்சி முறை குறித்த பட்டியல் உள்ளிட்டவை இன்னும் பல மின் விநியோக அலுவலகங்களுக்குப் போகவில்லை. இதனால்தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மின்விநியோக அலுவலகங்களுக்கு இதுதொடர்பான உத்தரவு கயத்தாரிலிருந்து வர வேண்டுமாம். ஆனால் இன்னும் இந்த உத்தரவு அங்கிருந்து போகவில்லையாம். இனால் தொடர்ந்து பழைய மின்வெட்டே நீடிக்கிறதாம்.
இதற்கிடையே, மின்வெட்டை முறையாக சரியாக அமல்படுத்துகின்றனரா, விதிமீறல் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க 32 மாவட்டங்களுக்கும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனவாம். இதில், மின் மண்டல தலைமை பொறியாளர்கள் தலைமையில், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனராம்.
முதல்வரே நேரடியாக ஆலோசனை நடத்தி பல கட்ட ஆய்வுக்குப் பின்னர்தான் திருத்தப்பட்ட மின்வெட்டை மின்வாரியம் அறிவித்தது. அதை உடனடியாக அமல்படுத்தாமல் இப்படியா குழப்புவது. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது என்று தமிழக மக்கள் குமுறுகிறார்கள்.
Social Plugin