Hot Posts

6/recent/ticker-posts

10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் ரூ.130! வாங்குவதற்கு செலவோ ரூ.500ஐ தாண்டுது! வாங்கியும் பலனில்லை!!

பத்தாம் வகுப்பு தேர்வு வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்குகிறது. அதற்குள் மாதிரி வினாத்தாளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.



தமிழகம் முழுக்க மாதிரி வினாத்தாள் கிடைக்காமல், மாணவர்களும் பெற்றோர்களும் பதட்டத்தில் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறுகையில்,

சென்னையில் நான்கு பள்ளிகளிலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் விநியோகிக்கப்பட்டது. ஆனால், இப்போது எந்த பள்ளியில் போய் கேட்டாலும் மாதிரி வினாத்தாள் தீர்த்துவிட்டது என்று சொல்லுவதால் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிகல்வித்துறை இயக்குநரகத்திலேயே மாதிரி வினாத்தாள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரால் வழக்கப்படுவதால், மாணவர்களும்,. அவர்களின் பெற்றோர்களும் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.


அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களிலேயே இந்த மாதிரி வினாத்தாள்களை விநியோகம் செய்தால் அனைத்து மாணவர்களுக்கும் வசதியாக இருக்கும். வசதி குறைவான மாணவர்கள் சென்னை வந்து மாதிரி வினாத்தாளை வாங்குவது முடியாத ஒன்று. 

மாதிரி வினாத்தாளின் விலை ரூ.130. தற்போது பேருந்து கட்டண உயர்வால் சென்னைக்கு வடமாவட்டங்களில் இருந்தோ, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து போகவேண்டுமானால் குறைந்த பட்சம் 500 ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளது என்கிறவர்கள்,''அரசு (பள்ளிக்கல்வி துறை இயக்குநரகத்தின் வழிகாட்டுதலின் பேரில் பெற்றோர் ஆசிரியர் கழகம் வழங்குகிறது) ஒரு வினாத்தாளை வெளியிடுகிறது என்றாலே அந்த கேள்விகள் பொதுத்தேர்வில் வரும் என்ற நம்பிக்கை மாணவர்கள் மத்தியில் வந்துவிடுகிறது. 

ஆனால், தமிழகத்தில் மொத்தம் 10 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சந்திக்க இருக்கிறார்கள். இவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம், இப்போது வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் மாதிரி வினாக்கள் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டதுதான். தற்போது வழங்கப்பட்டு வரும் இந்த மாதிரி வினாத்தாளில் கணக்கு பாடத்திற்கு மட்டும்தான் விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற பாடப்பிரிவுகளுக்கு வினாக்கள் மட்டுமே உள்ளன.



மற்ற பாட வினாக்களுக்கு விடை அளித்திருந்தால், இந்த கேள்விக்கு இத்தனை வார்த்தைகள் போதுமானது என்று மாணவர்களுக்கு தெளிவு பிறக்கும். சில மாணவர்கள் பதில் சரியாக எழுதியிருந்தாலும், போதாது என்று நினைத்து எழுதிக்கொண்டிருப்பார்கள். அதாவது கேள்விக்கு சரியான பதில் எழுதிவிட்டாலும், மதிப்பெண் குறைந்துவிடுமோ என்று நினைத்து மாணவர்கள் கூடுதலாக எழுதுவார்கள். 

இதனால் தேர்வின் போது நேரம் வீணாகிறது. இந்த குழப்பதை நீக்க இந்த மாதிரி வினாத்தாளில் முயற்சி எடுக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த மாதிரி வினாத்தாளில் கணக்கு பாடத்தை போன்று மற்ற பாடங்களுக்கும் விடை அளிக்காமல் இருப்பது வாங்கியும் பலனில்லை என்பதையே காட்டுகிறது.

மேலும், இந்த கேள்விகளெல்லாம் புத்தகத்திலுள்ள பயிற்சி வினாக்கள் தான். அதனால் பாடநூலில் உள்ள பயிற்சி வினாக்களையும், அதற்கான பதில்களையும் படித்து சுயமாக சோதித்துக்கொண்டாலே தேர்வில் எளிமையாக வெற்றிப் பெற்றுவிடலாம். இந்த கேள்விகளை முழுமையாக நம்பி, இதைமட்டுமே படித்தால் நிச்சயமாக முழுமையான வெற்றியை பெற முடியாது என்றனர்.