Hot Posts

6/recent/ticker-posts

நாளை கடைசி டெஸ்ட்: 4-வது தோல்வியை தவிர்க்குமா இந்தியா?



இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் இதுவரை நடந்த 3 டெஸ்டிலும் இந்திய அணி மோசமாக தோற்று தொடரை இழந்தது.

சிட்னி டெஸ்டிலும், பெர்த் டெஸ்டிலும் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இதனால் இந்திய வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்ட்டில் நாளை(24-ந்தேதி) தொடங்குகிறது.
இதுவரை நடந்த 3 டெஸ்டிலும் தோற்ற இந்திய அணி இந்த டெஸ்டிலாவது தோல்வியை தவிர்க்குமா? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பயணத்தில் இந்திய அணி தான் மோதிய 4 டெஸ்டிலும் தோற்றது.

தற்போது வெளிநாட்டில் தொடர்ந்து 7 தோல்வி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஏற்பட்ட நிலைமை ஆஸ்திரேலியாவிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்திய வீரர்கள் குறைந்த பட்சம் 'டிரா' செய்ய கடுமையாக போராட வேண்டும்.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியா இந்த டெஸ்டிலும் வென்று 4-0 என்ற கணக்கில் இந்தியாவை 'ஒயிட் வாஷ்' செய்ய இலக்காக வைத்துள்ளது. பெர்த் டெஸ்டில் மெதுவாக பந்து வீசியதால் கேப்டன் டோனிக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைய டெஸ்டில் அவர் ஆடமாட்டார். ஷேவாக் கேப்டனாக பணியாற்றுவார்.
அவர் 3 டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டனாக பணியாற்றி உள்ளார். இதில் 2 டெஸ்டில் வெற்றி பெற்றது. ஒரு டெஸ்ட் 'டிரா' ஆனது. டோனி ஆடாததால் விர்த்திமான்சகா விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்.

அவருக்கு இது 2-வது டெஸ்ட் ஆகும். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மாவுக்கு ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
வி.வி.எஸ்.லட்சுமண் மோசமாக விளையாடி வருவதால் அவருக்கு பதிலாக ரோகித்சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கலாம். ஆனால் சீனியர் வீரரான லட்சுமணனை அணி நிர்வாகம் நீக்காது என்றே தெரிகிறது. சீனியர் வீரர்களான தெண்டுல்கர், டிராவிட் ஆகியோர் தங்களது பங்களிப்பை அதிகமான முறையில் செலுத்த வேண்டும். இதேபோல தொடக்கமும் சிறப்பாக அமைய வேண்டும்.

தற்காலிக கேப்டனான ஷேவாக் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தனது அதிரடியை வெளிப்படுத்தவில்லை. அவரும், காம்பீரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அடிலெய்ட்டு ஆடுகளம் சுழற்பந்து வீரர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இதனால் இந்திய அணி 2 சுழற்பந்து வீரர்களுடன் விளையாடலாம் என்று ஷேவாக் இன்று தெரிவித்தார்.

இதனால் அஸ்வினும், ஒஜாவும் விளையாடலாம். பெர்த்தில் விளையாடிய வினய்குமார் நீக்கப்படுவார். இஷாந்த்சர்மா அல்லது உமேஷ்யாதவ் ஆகியோரில் ஒருவர் கழற்றி விடப்படலாம். ஆஸ்திரேலிய அணி 3 வேகப்பந்து வீரர், ஒரு சுழற்பந்து வீரருடன் களம் இறங்கும். பெர்த் டெஸ்டில் நீக்கப்பட்ட சுழற்பந்து வீரர் நாதன் லயன் இடம் பெறுகிறார். வேகப்பந்து வீரர் ஸ்டார்க் நீக்கப்படுகிறார்.

ஹில்பென்ஹாஸ், பீட்டர் சிடில், ஹாரிஸ் ஆகிய வேகப்பந்து வீரர்கள் ஆடுகிறார்கள். பேட்டிங்கில் வார்னர், எட்கோவன், கேப்டன் கிளார்க், பாண்டிங், மைக் ஹஸ்சி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.
ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.