அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அப்பகுதி அதிமுக கவுன்சிலர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவல்லிக்கேணி, சின்னதம்பி தெருவில் உள்ள சாக்கடை கழிவுநீர் குழாயில் கடந்த 6 மாத காலமாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் எப்போதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதி வார்டு கவுன்சிலரான அதிமுகவை சேர்ந்த முகமது அலி ஜின்னாவிடம் பலமுறை மக்கள் புகார் கூறினர். அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்பகுதியில் குப்பை களையும் வாரத்திற்கு ஒரு முறைதான் எடுக்கின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதே பகுதியில்தான் மாநகராட்சி வார்டு அலுவலகமும் மாநகராட்சி பள்ளி மற்றும் நூலகமும் உள்ளது. பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் இன்று காலை, ஸ்டார் தியேட்டர் அருகில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் முகமது அலி ஜின்னா, மறியலில் ஈடுபட்டவர்களை தரக்குறைவாக பேசியதுடன் நான் இருக்கும் போது என்னையும் மீறி எப்படி மறியலில் ஈடுபடலாம் என்று கூறி அப்பகுதியினரை தாக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவருடன் வந்திருந்த அதிமுகவினர், பெண்களை தரக்குறைவாக பேசினர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். கவுன்சிலர் முகமது அலி ஜின்னாவின் இந்த அடாவடி செயலால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Social Plugin