Hot Posts

6/recent/ticker-posts

கடல்சார் பட்டய படிப்பு நுழைவுத்தேர்வுக்கு தடை கோரி வழக்கு:மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!!


 கடல்சார் பட்டய படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடல்சார் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஜோதிகுமார், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக் கில் கூறியிருப்பதாவது: கப்பலுக்கு வர்ணம் பூசுவது, கப்பலை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட சிறு பணிகளை செய்ய 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 6 மாதம் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை விதிமுறை வகுத்தது. 

இதற்கான படிப்புகளை எங்களது கல்லூரி நடத்தி வந்தது. மாணவர்களை எங்கள் கல்லூரி நேரடியாக தேர்வு செய்து வந்தோம். இந்நிலையில், இந்த 6 மாத படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இயக்குனரகம் அறிவித்தது. இந்த நுழைவுத் தேர்வு நடத்தும் பொறுப்பை மும்பையில் உள்ள மாலுமிகள் அறக்கட்டளையிடம் இயக்குனரகம் ஒப்படைத்தது. அதன்படி, இந்த அறக்கட்டளை நுழைவுத் தேர்வை நடத்தியது. கடந்த சில ஆண்டுகளில் இந்த நுழைவுத் தேர்வு நடத்தி, ரூ.10 கோடிக்கு மேல் அறக்கட்டளை வசூலித்துள்ளது.

நுழைவுத் தேர்வுக்கான கட்டணத்தை யாரிடமும் அனுமதி பெறாமல் நிர்ணயித்து பணம் வசூலித்துள்ளது. தனியார் அறக்கட்டளை இவ்வளவு பணத்தை வசூலித்து, அதை மத்திய அரசு கணக்கில் செலுத்தாமல் சொந்த கணக்கில் சேர்த்துள்ளது. இதற்கு இயக்குனரகம் அனுமதி கடிதம் வழங்கியுள்ளது. இது சட்ட விரோதமானது. இந்த ஆண்டும் இந்த நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நுழைவுத் தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும். பணம் வசூல் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு குழு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது
 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பால்வசந்தகுமார், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இயக்குனரகத்தின் இயக்குனர் ஜெனரல், மத்திய நிதித்துறை செயலாளர், மத்திய அமைச்சரக செயலாளர், மத்திய ஊழல் கண்காணிப்பு தலைமை அதிகாரி ஆகியோர் 2 வாரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன், வரும் 12ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.