Hot Posts

6/recent/ticker-posts

தலாக் பிரச்சனையும்,தீர்வும்!!


மலர்ந்துமணம் வீசவேண்டிய இல்வாழ்க்கையைச் சருகெனச் சாய்க்கும் விவாகரத்துகள் பெருகிவிட்ட சூழலை ஆங்கங்கே காண முடிகிறது.
ஆண்கள் மட்டுமே தலாக் விட்டுக் கொண்டிருந்த காலங் கடந்து இன்று இருபாலரும் விவாகரத்து வேண்டி நிற்கும் விபரீத நிலை.
ஏனிந்த அவல நிலை?

"இறைவனிடம் ஆகுமான விஷயங்களில் மிகவும் கோபதிற்குரியது தலாக்" என்பது நபிமொழி.
"நன்முறையில் வாழுங்கள்" என வலியுறுத்துகிறது வான்மறை. "ஆயிரங் காலத்து பயிர்" என வருணிக்கப்படும் திருமணம் மூலம் இனிய வாழ்க்கை அமைத்து குளம் தழைக்க மக்கட் செல்வங்களை பெற்றெடுத்து பாரம்பரியப் பெருமையைப் பறை சாற்றும் வாய்ப்புகளை இந்த சமுதாயம் இழந்து கொண்டே வருகிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம்?

கண்மணி ஸல்லல்லாஹு அளிஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள். "ஒரு பெண் நான்கு விஷயங்களுக்காக திருமணம் முடிக்கப்படுகிறாள்.

  1. பணத்திற்காக,
  2. அழகிற்காக,
  3. குடும்பத்திற்காக,
  4. மார்க்கப் பற்றுக்காக,
நீங்கள் மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்".

மார்க்கப் பற்றுல்க்ள பெண் எல்லாச் சூழ்நிலைகளிலும் இறைவனை அஞ்சுவதால் அழகிய இல்லறம் அமைய வழிவகுப்பாள்.கதிஜா நாயகியின் வழி தெரிந்து கணவருக்கு மரியாதையுடன் பணிவிடை செய்வாள்.ஆயிஷா நாயகியின் வழி நின்று கணவரை மகிழ்விப்பாள்.பாத்திமா நாயகியின் வழியில் குடும்ப வரவு செலவுகளை வகைப்படுத்துவாள்.

இதைப் போன்றே மார்க்கப் பற்றுள்ள மணமகனும் இறைவனுக்கு அஞ்சி இரசூல் நபி வழியில் இல்லறத்தை அமைத்து கொள்வார்.
கணவனும்,மனைவியும் மனம் ஒத்து வாழும் இல்லறமே நல்லறமாய் அமையும்.குறையில்லாதவன் இறைவன் மட்டும் தான்.மனிதர்களில் சில குறைவுகள் இருப்பது இயற்க்கை தம்பதியர் தத்தம் துணையின் குறைகளை பெரிது படுத்தாமல் அவர்களது நிறைகளை மட்டும் எண்ணி வாழ்க்கை நடத்தினால் இனிய இல்லறம் அமையும்.

அழிந்து போகும் அழகிற்காகவும்,பணத்திற்காகவும் திருமணம் செய்து சிறிது காலத்தில் அவற்றில் குறை ஏற்படும் போது விவாகரத்து கேட்க்கும் தம்பதியர் தம்முடைய பிள்ளைகளின் நிலையை மனதிற் கொண்டால்   இப்பிரச்சனையிலிருந்து மீளலாம்.விவாகரத்துப் பெற்றதும் தமக்குத் தேவையான வேறு துணையைத் தேடிகொள்வோர் தம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தன் தாயை விட்டுப் பிரிந்தவரின் முதல் எழுத்தை தன பெயருக்கு முன் போடா விரும்பாத குழந்தைகள், ''உங்க வாப்பா எங்கிருக்காங்க", எனக் கேட்டால் "எனக்கு வாப்பா இல்லை" என விரக்தியோடும்,வேதனையோடும் கூறும் குழந்தைகள்.இச்சூழலில் தாயும் இன்னொரு துணையைத் தேடிக் கொண்டால் பெற்றோர் உயிரோடிருந்தும் அனாதையாய் நிற்கும் அவலம். இவையெல்லாம் அனுபவிப்போருக்கு மட்டுமே முழுமையாகப் புரியும்.

"தகுந்த காரணமின்றி தலாக் கேட்க்கும் பெண்ணுக்கு சுவன வாடை ஹராம்" என்கிறது நபிமொழி.இறைவனின் அர்ஷையே அசைக்கக் கூடிய தலாக் இறைவனின் கோபத்திற்கு வழிவகுக்கும் ''நீங்கள் அவர்களை வெறுத்தால் அதிகமான நன்மைகளை வெறுத்தவர்களாகக் கூட ஆகலாம்'' என குர்ஆண் குறிப்பிடுகிறது.

பிள்ளைகளின் எதிர்காலத்தையும்,அவர்களது மன நிலைமையையும் பாதிக்கும் விவாக விடுதலையை விட்டொழியுங்கள்.பிறருக்காக வாழும் இன்பமே பேரின்பம்.உங்கள் பிள்ளைகளுக்காக வாழுங்கள்.நல்ல பிள்ளைகள் உங்களை எண்ணி கண் கலங்காமல் உங்கள் ஒற்றுமையான அன்பால் அவர்களது உள்ளம் மலரட்டும்.
                ஆக்கம்,
         S.M.A.ஹைருன்னிஷாமு அஷ்கரிய்யா,
               காயல்பட்டினம்.