பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் விழா தமிழகத்தின் பல பகுதியிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்காக்களிலும் சாரை சாரையாக மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்புக்கு போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகம் முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நேற்று மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல இடங்களில் நேற்று முன்தினமும் நேற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று விறுவிறுப்பாக நடக்கிறது. பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. காலையில் உறவினர்களை சந்தித்து பலர் ஆசி பெற்றனர்.
பொழுது போக்க எந்த இடங்களுக்கு செல்வது என்று பலர் நேற்றே முடிவெடுத்திருந்தனர். அதன்படி சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, நீலாங்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, விஜிபி, எம்ஜிஎம் போன்ற பொழுதுபோக்கு மையங்களில் மக்கள் குவிந்தனர். மெரினா கடற்கரையில் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் இறங்காமல் இருப்பதற்காக கம்புகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குதிரைப் படை வீரர்களும் ரோந்து சுற்றி வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
பெண் மற்றும் ஆண் போலீசார் சாதாரண உடைகளில் ரோந்து சுற்றி வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெரினா கடற்கரையில் காலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. காலையிலேயே மிதமான வெயில் அடித்தது. லேசான குளிரும் இருந்தது. அதனால் கடற்கரையில் சிறிது சிறிதாக சேர்ந்த கூட்டம் நண்பகலில் படையெடுக்கத் தொடங்கியது. பிற்பகலில் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. காலையிலேயே குழந்தைகள் காணாமல் போனது பற்றி போலீசுக்கு புகார்கள் வந்தன. அதனால், போலீசார் மைக் மூலம் அறிவிப்பு செய்து குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் ஒலி பெருக்கி மூலம், குழந்தைகள், நகைகளை பத்திரமாக பார்க்கும்படி போலீசார் எச்சரிக்கை செய்தபடி இருந்தனர். இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர்கள் பாஸ்கரன், புகழேந்தி ஆகியோரது தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெசன்ட் நகர் கடற்கரையில் துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கிண்டி சிறுவர் பூங்காவில் காலையிலேயே கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும், தனியார் பொழுது போக்கு பூங்காக்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்கள் சிறப்பு கட்டண குறைப்புகளை செய்திருந்தனர். இதனால் குடும்பத்துடன் காணும் பொங்கலை பலரும் கொண்டாடினர். பொங்கலையொட்டி இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து டிவிக்களில் நிகழ்ச்சிகளை பார்த்தவர்கள், நேற்று குடும்பத்துடன் பொழுதுபோக்கு மையங்களுக்கு சென்றதால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Social Plugin