சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் நேற்று 4ம் நாளாக நீடித்தது. இதனால் தினமும் ரூ.2.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சமையல் கேஸ் லோடு ஏற்றி செல்லும் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு பொதுத்துறை ஆயில் நிறுவனங்கள் வாடகையை உயர்த்த வேண்டும். புதிதாக டெண்டரில் பங்கேற்றுள்ள 600 எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேஸ் டேங்கர் லாரிகள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. நேற்று 4வது நாளாக ஸ்டிரைக் நீடித்தது.
வேலை நிறுத்தம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் சமையல் எரிவாயு லோடு செய்யும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், 20 ஆயிரம் டன் சமையல் கேஸ் லோடு செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு கேஸ் கொண்டு செல்வதும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான கேஸ் செல்வதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடித்தால் வீடுகளுக்கு சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் குறித்து தென்மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் நேற்று கூறியதாவது: எல்பிஜி டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தம் நீடிக்கிறது. ஆயில் நிறுவனங்களிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை.
இது தொடர்ந்தால் இன்னும் 2 நாட்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும். பொதுமக்கள், தொழிலாளர்கள் நலன் கருதி மத்திய அரசு டேங்கர் லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க முன்வர வேண்டும். போராட்டம் காரணமாக டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2.5 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதை சார்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கார்த்திக் கூறினார்.
Social Plugin