"இஸ்லாம்' ஓர் இனிய "மார்க்கம்'. "நியாயமான வழியில் பொருளை ஈட்டி வாழுங்கள். ஹராமான (தடுக்கப்பட்ட) வழியில் பணம் சம்பாதிக்க வேண்டாம்' என அச்சமூட்டி எச்சரிக்கையும் செய்கின்றது. இஸ்லாமிய மார்க்க நூல்களில் வேண்டிய சட்ட திட்டங்களையும் வகுத்துக் காட்டியுள்ளது. இவற்றை எல்லாம் கண்டு அஞ்சி "துறவறம்' கொள்ளவும் இஸ்லாம் கண்டிப்பாக அனுமதிக்காது.நமது மார்க்கம் தூய வழியில் பொருளை ஈட்டுங்கள் என்று சொல்வதைப் போன்று, அப்பொருளை எப்படி செலவழிப்பது என்பதையும் நமக்கு சொல்லித் தருகிறது. அது பல நிபந்தனைகளையும் எடுத்து இயம்புகின்றது.நமக்கு இறைவன் அளித்துள்ள செல்வம்- பணம் - காசு - சொத்து- சுகங்கள் அனைத்தும் நமக்கு மட்டுமே உரிமை கிடையாது.
ஏழை - எளிய மக்கள், அனாதைகள், வறுமையில் வாடும் உற்றார் உறவினர்கள் அனைவருக்காகவும் சேர்த்துத்தான், இறைவன் அவைகளை நம்மிடம் கொடுத்து பிறருக்கு அளிக்கும்படி ஏவுகின்றான். இன்று நம்மிடமிருக்கும் சொத்து - சுகம் நாளை நம்மை விட்டுச் சென்று விடலாம். சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இஸ்லாம் கூறும் ஐந்து கடமைகளில் ஒன்றுதான் "ஜகாத்' (ஏழை வரி) ஆகும். பணம் படைத்த செல்வச் சீமான்கள் மேலே கூறப்பட்டவைகளை மறந்து மனம் போன போக்கில் ஆடம்பர வாழ்வில் மூழ்கி அனைத்தையும் இழந்து இழிநிலையை அடைந்து அல்லல்படுவதை நாம் கண்கூடாகக் காணலாம்.மறுமை வாழ்வின் மீது நம்பிக்கைக் கொண்ட "முஃமின்கள்' (இறை நம்பிக்கைக் கொண்டோர்) மரணித்த பின், அவர்கள் உலகில் வாழும் காலங்களில் தான - தர்மங்கள் ஜகாத் (ஏழை வரி) ஆகிய அனைத்து நல்ல செயல்களுக்காக செலவு செய்த ஒரு ரூபாய்க்கு பதிலாக 700 நன்மைகளை இறைவன் அளிப்பான் என ஆசைகொண்டு செயல்பட்டிருந்தால், அவர்களுக்கு இறையருளும், அவனுடைய திருப்பொருத்தமும் மறுமையில் நிச்சயம் கிடைக்கும்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலங்களில் நபித் தோழர்கள் இறைவன் பாதையில் தங்களது சொத்து சுகங்களை வாரி வழங்கிய சரித்திரச் சான்றுகளைக் காண்போம்.
ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டில் "தபூக்' யுத்தம் நடைபெற்றது. அது சமயம் யுத்த வீரர்களின் செலவு மற்றும் அனைத்துத் தேவைகளுக்கும் பொருள் தேவை என்பதை உணர்ந்த நபிகளாரின் உற்ற தோழர் அபூபக்கர் (ரலி) தனது வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களையும் எடுத்து வந்து நபிகளார் முன்னிலையில் வைத்துவிட்டார். தோழர் உமர் (ரலி) தனது வீட்டிலிருந்த பாதிப் பொருள்களைக் கொண்டு வந்தார். தோழர் உதுமான் (ரலி) 300 ஒட்டகங்களையும், அவற்றின் மீது நிறையப் பொருள்களையும், ஓராயிரம் தங்கக் காசுகளையும் அளித்தார். மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) இருநூறு ஊகியா வெள்ளி வழங்கினார். ஆசிம் பின் அதீ (ரலி) எழுபது மரக்கால் பேரீட்சம் பழங்களைக் கொண்டு வந்தார்.
தங்களது வசதிக்கும், தகுதிக்கும் அதிகமாகவே அல்லாஹ்வின் பாதையில் அனைவரும் செலவு செய்தார்கள். "எனக்குப் பின் பிள்ளைகள் என்ன ஆவார்களோ?' என்று கூட அவர்கள் எண்ணவில்லை. காரணம், அவர்கள் மறுமை வாழ்வை நேசித்தும், நம்பிக்கைக் கொண்டும் மறுமையில் கிடைக்கும் வெற்றியை மட்டுமே உண்மை வெற்றியெனக் கருதினார்கள்.எனவே, இம்மை வாழ்வின் மோகத்தில் திளைக்காமல், உலகப் பொருள்களை நல்ல வழியில் செலவு செய்து, மறுமை வாழ்வை விலை கொடுத்து வாங்கவே மோகம் கொள்வோம்.!
ஆக்கம்,
G.அஹமத்.
Social Plugin