விரைவில் ஹெச்ஐவிக்கு தடுப்பு ஊசி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹெச்ஐவி எனப்படும் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் தாக்குதலால் உயிரிழப்போர் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதற்கு தீர்வுகாணும் வகையில் தொடர் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எய்ட்ஸ் தாக்குதலில் இருந்து 80 முதல் 83 சதவீத பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தடுப்பு ஊசியை கொண்டு முதல்கட்டமாக குரங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எதிர்பார்த்த வெற்றி கிட்டியுள்ளதாம். உத்தா மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆடம் ஸ்பைவாக் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த அரிய தகவல் வருமாறு: உலகம் முழுவதும் எய்ட்ஸ் உயிர்கொல்லியாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில் தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் முதல்முறையாக வெற்றி கிட்டியுள்ளது. குரங்குகளை தாக்கும் சைமன் இம்யுனோ டெபிஷியன்சி (எஸ்ஐவி ) என்ற நோய்க்கிருமிகள் அடையாளம் காணப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தக் கிருமிகள் ஹெச்ஐவி-1 எய்ட்ஸ் நோய்க் கிருமிகளை போன்றே இருந்தது கண்டறியப்பட்டது. புதிய தடுப்பு மருந்து ரெஸஸ் வகையை சேர்ந்த சுமார் 40 குரங்குகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருந்தது. நோய்க் கிருமிகள் ஊசி மூலம் செலுத்தப்பட்ட குரங்குகளுக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதில் 80 முதல் 83 சதவீத நோய்க்கிருமிகள் அழிந்திருந்தது. இதன் மூலம் புதிய தடுப்பு ஊசி, மனிதர்களின் எய்ட்ஸ் நோயையும் கட்டுப்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தொடர் ஆய்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Social Plugin