Hot Posts

6/recent/ticker-posts

சிகரெட்..,சீக்ரெட்..,பழக்கம்!!



 ஒரு நாளைக்கு இரண்டு முறை கடைக்குப் போய் டீ குடிப்பது அவசியம். ஆனால் ஆறுமுறை சிகரெட் குடிப்பது அவசியமா, அநாவசியமா? அவசியம் என்கிறவர்கள் மேற்கொண்டு படிக்கவும்.
ஒரு சிகரெட்டின் விலை 5 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு 6 சிகரெட் அடிக்கிறார் என்று வைத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு 30 ரூபாய், ஒரு வாரத்துக்கு 210 ரூபாய், ஒரு மாதத்துக்கு (30 நாட்கள்) 900 ரூபாய், ஒரு வருடத்துக்கு (365 நாட்கள்) 10,950 ரூபாய், பத்து வருடங்களுக்கு 1,09,500 ரூபாய், முப்பது வருடங்க ளுக்கு 3,28,500 ரூபாய்..!
தம்’ அடிப்பது கெட்ட பழக்கம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதுமட்டுமல்ல, ஒரு வகையில் அது ஒரு ஊதாரிச் செலவுதான். ஐந்தாறு சிகரெட் குடிப்பதால் என்ன லட்சக் கணக்கிலா பணம் நஷ்டமாகிவிடபோகிறது, அதைப் போய் ஊதாரித்தனமான செலவு எனச் சொல்வதற்கு என்று நினைக்கிறீர்களா? உண்மையில் இந்தப் பழக்கத்தால் நாம் இழக்கும் பணம் கொஞ்சநஞ்சமல்ல.
ஐந்து ரூபாய்தானே என்று அலட்சியமாக நினைத்தது எப்படி கண்ணுக்குத் தெரியாமல் லட்சங்களைத் தொட்டுவிட்டது பார்த்தீர்களா! இத்தோடு விவகாரம் முடிந்து விடவில்லை. இன்னும் மேலே படியுங்கள். அப்போதுதான் புகைப்பது எவ்வளவு ஊதாரித்தனம் என்பதும் புரியும்.
புகைவிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்வதோடு, காசையும் கரியாக்குவதற்குப் பதில் அந்தப் பணத்தை 10 சதவிகிதம் ரிட்டர்ன் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்தால் உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?
12,33,324 ரூபாய் (ஒரு மாதத்துக்கு 1000 ரூபாய் விகிதம் 25 ஆண்டுகள் கட்டினால்!)
அம்மாடியோவ்! இத்தனை லட்சமா என்றெல்லாம் அசந்து வாய் பிளக்காதீர்கள். சிறுதுளி பெரு வெள்ளம் அல்லவா! இனியாவது தம் பிடிச்சு தம் அடிக்கிறதை நிறுத்திட்டா உடம்புக்கும் நல்லது; பணமும் மிச்சமாச்சே!
               ஆக்கம்,
         S.கார்த்திகேயன்.