Hot Posts

6/recent/ticker-posts

ஆஸ்திரேலிய பயணத்தில் இந்தியாவின் தோல்விமிகப்பெரிய அவமானம்: வாசிம் அக்ரம் தடாலடி!!



டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு மைதானத்தில் தொடர்ந்து 7 டெஸ்டில் தோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்து பயணத்தில் 4 டெஸ்டிலும் தோற்றது. தற்போதைய ஆஸ்திரேலிய பயணத்தில் 4 டெஸ்டில் இதுவரை விளையாடிய 3 டெஸ்டில் தோற்றது.
 
சிட்னி, பெர்த் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்து வருவதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
 
டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. சீனியர் வீரர்களான டிராவிட், லட்சுமண், ஷேவாக் ஆகியோரும் விமர்சிக்கப்படுகிறார்கள். லட்சுமணனை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகமாக எழுந்துள்ளது.
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய பயணத்தில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்வி துணைக்கண்டத்துக்கே அவமானம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
 
இந்திய அணி மீதான விமர்சனம் நியாயமானதே. சீனியர் வீரர்களான டிராவிட், லட்சுமண், தெண்டுல்கர் ஆகியோர் இருந்தும் இப்படி மோசமான தோல்வியை தழுவி இருப்பது வேதனையாகும்.
 
சிட்னி, பெர்த் மைதானங்களுக்கு ஏற்ற வகையில் சீனியர் வீரர்கள் ஆட முடியவில்லை. வயது காரணமாக அவர்களது உடல் ஒத்துழைக்க வில்லை. 2 நாட்களிலேயே சோர்ந்து விடுகிறார்கள். பெர்த் டெஸ்டில் ஏற்பட்ட தோல்வி மூலம் 7-வது தொடர் தோல்வியை சந்தித்து உள்ளது.
 
இந்த தோல்விக்கு பிறகு கிரிக்கெட் வாரியம் மாற்றத்துக்கான தகவலை அனுப்பி இருக்க வேண்டும். சமீபத்தில் 'நம்பர் 1' அணியாக திகழ்ந்த இந்திய கிரிக்கெட் அணி தற்போது தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.
 
தேர்வு குழுவினர் சில துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்திய அணியின் இந்த நிலை துணை கண்டத்துக்கு ஏற்பட்ட அவமானமாகும் என்று வாசிம் அக்ரம் கூறினார்.