Hot Posts

6/recent/ticker-posts

புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க இடைக்கால தடை: சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும்!!


புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.   கடந்த தி.மு.க. ஆட்சியில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த கட்டிடம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்படும் என அறிவித்தது.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எம்.கே.பி. நகரைச் சேர்ந்த வக்கீல் வீரமணி ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார். அதில், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்று பெறாமல் மருத்துவமனையாக மாற்ற முடியாது. ஆனால் இதற்கான கட்டிடப்பணிகளை அரசு மேற் கொண்டுள்ளது. மருத்துவ மனையாக மற்றும் பணிக்கான டெண்டர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே மருத்துவமனையாக மாற்ற தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.  
 
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முருகேசன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, மருத்துவமனையாக மாற்ற சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா? கட்டிடத்தை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதா? டெண்டர் அறிவிப்பு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா? என கேள்விகள் எழுப்பினர். இதற்கு இன்று பதில் அளிக்கும்படி அட்வகேட் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி கூறியதாவது:-  
 
இந்த கட்டிடம் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது. கட்டிடத்தை மாற்ற தடையில்லா சான்றிதழ் பெற அவசிய மில்லை. மருத்துவமனையாக மாற்றும் பணிக்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. அதற்கான கடைசி நாள் வருகிற 24-ந்தேதி ஆகும். கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடை பெறவில்லை. இது அரசின் கொள்கை முடிவாகும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.  
 
இதையடுத்து நீதிபதிகள், புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க இடைக் கால தடை விதித்தனர். நீதிபதிகள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-
 
அரசின் கொள்கை முடிவில் நாங்கள் (கோர்ட்டு) தலையிடவில்லை. டெண்டர் அறிவிப்புகளையும் தடை செய்யவில்லை. கட்டிடத்தை மாற்றி அமைக்கும்போது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் தேவையா? வேண்டாமா? என்பது பற்றி முடிவு செய்து கொள்ளலாம். கட்டிடத்தை மாற்றுவதற்கு தடையில்லா சான்று வாங்கும் வரை புதிய தலைமை செயலக கட்டிடத்தை மாற்றம் செய்யவோ, இடிக்கவோ கூடாது. இதற்கு இடைக்கால தடை விதிக்கிறோம்.
 
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.  
 
வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 13-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.