Hot Posts

6/recent/ticker-posts

மாணவர்கள் கண்ணீர் அஞ்சலி!!!


சென்னை பாரிமுனையில் உள்ள செயிண்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கடந்த 9-ந்தேதி மதியம் தனது மாணவனால் வகுப்பறையில் குத்தி கொலை செய்யப்பட்டார். அனைவரையும் அதிர்ச் சிக்குள்ளாக்கிய இந்த படு பாதக கொலையை செய்த 9-ம் வகுப்பு மாணவர் இஸ்மாயில் கைது செய்யப்பட்டார்.
இந்தி பாடம் சரியாக படிக்காததை டைரி குறிப்பேட்டில் எழுதி பெற்றோரிடம் திட்டு வாங்க வைத்ததால் ஆத்திரத்தில் ஆசிரியை குத்திக் கொன்றதாக இஸ்மாயில் கூறினான். கைதான இஸ்மாயில் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.  
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பள்ளிக்கூட கலையரங்கில் அஞ்சலி கூட்டம் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சிபிமேத்யூ தலைமை தாங்கினார்.
பாதிரியார்கள் பால்ராஜ்மான்யம், தேவார்ஜுன், பி.டி.தாமஸ், ஜோசப் பெர்னாண்டஸ், ஸ்டான்லி, பிரிட்டோ, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர் இஸ்மாயில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிஷோர், ஆங்கிலோ இந்தியன் பள்ளி துணைத் தலைவர் பிரபா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
ஆசிரியை உமாமகேஸ்வரி கணவர் ரவிசங்கர், மகள்கள் சங்கீதா, ஜனனி, தாய் அமிர்தம் உள்பட பள்ளியில் படிக்கும் 1500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.  
கலையரங்க மேடையில் உமா மகேஸ்வரி படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. முதலில் ஆசிரியைக்கு இரங்கல் தெரிவிக்க வகையில் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் ஆசிரியை உமா மகேஸ்வரி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது பலர் கண்கலங்கினர். ஆசிரியையின் 2 மகள்களும் தாயின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியபோது ஆசிரியைகள் சோகத்தில் கண் கலங்கினர்.
ஆசிரியை உமாமகேஸ்வரிக்கு புகழாரம் சூட்டி பலர் பேசினார்கள். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி பேசியதாவது:-
இந்த துயரமான சம்பவம் இனி எந்த காலத்திலும் நடக்க கூடாது. ஆசிரியைக்கு என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நாம் ஒரு நல்ல ஆசிரியரை இழந்து விட்டோம். இது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த தருணத்தில் மாணவர்கள் ஒரு உறுதிமொழி எடுக்க வேண்டும். நாம் சிறந்த மாணவனாக, பண்புள்ள மாணவனாக வர வேண்டும் என்பதுதான். இதுதான் ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு நாம் செய்யும் நன்றி கடனாக இருக்கும்.
பாரதியார் தேவண் ஜுன் (தாளாளர்):- நாம் இழந்த ஆசிரியை உமாமகேஸ்வரி எல்லா திறமையும் உடையவர். தமிழ், இந்தி என எல்லா மொழியிலும் சிறந்து விளங்கினார். இப்படிப்பட்ட ஆசிரியர் நமக்கு கிடைப்பது அரிது. கடவுள் கொடுத்தார்... கடவுள் எடுத்தார்... என பைபிளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்படியா? எடுக்க வேண்டும் என எல்லோரையும் வேதனைப்பட வைத்து விட்டது. இது உச்சக்கட்ட இழப்பாகும். அவருக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.
கிஷோர் (பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்):- இது போன்ற துயர சம்பவம் நடப்பதற்கு பெற்றோரும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறார்கள். எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது. பெற்றோர்கள் தினமும் 30 நிமிடமாவது தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டும். அவரின் நிறை குறைகளை கேட்க வேண்டும்.
பள்ளியில் ஆசிரியர்கள் அனுப்பும் டைரி குறிப்புகளை பார்க்க வேண்டும். ஆசிரியர்களை அடிக்கடி அணுகி தங்கள் குழந்தைகளின் குறைகளை தீர்க்க வேண்டும்.
ஆசிரியை சசி:- கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரியை உமா மகேஸ்வரி என்னிடம் பேசினார். அப்போது இன்னும் 2 வருடத்தில் நான் இந்த உலகத்தை விட்டு போய் விடுவேன் என்றார். அவர் யதார்த்தமாகத்தான் இதை என்னிடம் கூறினார். ஆனால் இப்படி ஒரு சோகம் நிகழும் என்று நினைக்கவில்லை. கடவுள் அவரை அழைத்து விட்டார். முன் கூட்டியே அவருக்கு இது தெரிந்து இருக்கிறது. இவ்வாறு பேசும்போது அவரது கண்கள் கலங்கியது.  
விழாவில் ஆசிரியை உமா மகேஸ்வரி மகள்கள் சங்கீதா, ஜனனி ஆகியோரின் மேல்படிப்பு உதவிக்காக பள்ளி சார்பில் அவர்களது பெயரில் ரூ. 5 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

காலை 9 மணிக்கு தொடங்கிய அஞ்சலி நிகழ்ச்சி 10.30 மணிக்கு நிறைவு பெற்றது. பின்னர் மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பின்னர் ஆசிரியர்களுக்கு பள்ளியில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. நாளை மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.