இன்று தமிழக முழுவதும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த மின் தடை.இந்த மின் தடையால் விவசாயிகள் ,மாணவர்கள்,பச்சிளம் குழந்தைகள்,வயதானவர்கள் என அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த சில வாரமாக காலை 6 மணி முதல் 9 மணி வரையும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அதிகாலை ஒரு மணி நேரமும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளது. நெசவாளர்கள் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அரிசி ஆலையில் அரவை நடக்கவில்லை.
பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர். வசதி படைத்த சிலர், டீசல் இன்ஜின் மூலம் தண்ணீர் பாய்ச்சி ஓரளவு பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.
இந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 10, 12ம் வகுப்பு பொது தேர்வுக்கு படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சிம்னி விளக்கு ஏற்றிவைத்து அந்த வெளிச்சத்தில் படிக்கின்றனர். ரயில் நிலையங்களில் கம்ப்யூட்டர் செயல்படவில்லை. இதனால் சீசன் டிக்கெட் வாங்க வரிசையில் பயணிகள் காத்து இருக்கின்றனர். அன்றாட டிக்கெட் கொடுப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மின்வாரியத்துக்கு மக்கள் பலமுறை புகார் தெரிவித்துவிட்டனர்.மின் தட்டுப்பாடு நிலவுவதால் நாங்கள் என்ன செய்ய முடியும்? என அதிகாரிகள் கைவிரிப்பதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
இது போல பல நகரங்களிலும் மின் தடை ஏற்படுகிறது.இந்த மின் தடையால் மாணவர்கள் அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இருளில் சிக்கித் தவிக்கும் தமிழகதிற்கு தீர்வு எப்போது? என்பதே ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பு!
ஆக்கம்
S.அப்துல் வஹாப்
Social Plugin