இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சே மீதுபோர்க்குற்றங்கள் கூறப்பட்டுள்ளன.
இது பற்றி ஐநா சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்க ஆதரவுடன் கனடா கொண்டு வந்த தீர்மானமும் ஏற்கனவே ஒரு முறை தோற்கடிக்கப்பட்டது.
இப்போது இலங்கைக்கு எதிராக மீண்டும் இத்தீர்மானத்தை நேரடியாகவே கொண்டு வருவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இந்நிலையில் 47 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐநா மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டம் இன்று ஜெனிவாவில் தொடங்கியது.
இம்மாநாடு மார்ச் மாதம் 21ம் தேதி வரை நடைபெறும். இலங்கைக்கு எதிரான தீர்மானம் கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக இலங்கை அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், ரிஷார்ட் உட்பட 50க்கும்மேற்பட்ட இலங்கை குழுவினர் ஜெனிவா சென்றுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடுகளில் ஒன்று கொண்டுவரலாம் என்று முதலில் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது கிடைத்துள்ள தகவலின் படி ஆப்பிரிக்கா அல்லது தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்று இத்தீர்மானத்தை கொண்டுவரவிருப்பதாக தெரியவந்துள்ளது. 47 நாடுகளைக்கொண்ட மனித உரிமைகளை சபையில் 24 நாடுகளின் ஆதரவு ஒருந்தாலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிடும்.
இந்த தடவை 25 முதல் 30 நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்பதால் தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி என்று ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அதிபர் ராஜபக்சே அச்சம் அடைந்துள்ளார். இலங்கை விவகாரத்தை இப்போது விவாதிக்காமல் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐநா கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று ஜெனிவாவில் உள்ள இலங்கை குழு கேட்டுக்கொண்டது.
ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்படும் என்று மனித உரிமை சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே நேற்று இந்திய வெளியுறவு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் அவசரமாக தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் செயல்படுவதால் அதை முறியடிக்க இந்தியாவின் உதவி அவசியமானது என்பதை கோத்தபய ராஜபக்சே சுட்டிக்காடியதாக தெரிகிறது.
இதையடுத்து ஜெனிவா மாநாட்டில் என்ன நிலையை மேற்கொள்வது என்பது குறித்து மத்திய அரசு உயர்மட்ட ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.
முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஜெனிவாவுக்கு சுவிஸ் மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் வாழும் இடம்பெயர்ந்த தமிழர்கள் சென்றவண்ணம் உள்ளனர்.
Social Plugin