Hot Posts

6/recent/ticker-posts

பத்தாம் வகுப்பு சமச்சீர் கல்வி வினா-விடை புத்தகம் விற்பனை: நாளை முதல் கிடைக்கும்!!


இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் முதன் முதலாக நடைபெற உள்ளது. மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன், மாநில பாடத்திட்டங்கள் மாற்றப் பட்டு பொதுப்பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அவை புத்தகமாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக மாதிரி வினாத்தாள்கள் தயாரிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்தால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த புத்தகங்கள் அடங்கிய சி.டி.க்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டன.

மாதிரி வினா புத்தகங்கள் எப்போது கிடைக்கும் என மாணவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 4-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த புத்தகம் நாளை (வியாழக் கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 4 இடங்களில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

சைதாப் பேட்டை, சூளைமேடு ஆகிய இடங்களில் உள்ள ஜெய் கோபால் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியிலும் சேத்துப்பட்டு ஹாரிங் கடேன் சாலையில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியிலும், புரசைவாக்கம் ஈ.எல்.எம். பேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளியிலும் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழக அலுவலகத்தில் விற்பனை செய்யப்படவில்லை.

தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களுக்கான மாதிரி வினா புத்தகம் ரூ.50-க் கும், கணிதப் பாடப்புத்தகத்திற்கான வினாத்தாள்கள் மற்றும் தீர்வுகள் அடங்கிய புத்தகம் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படும். ஆங்கில வழி கணித மாதிரி வினாத்தாள், தீர்வுகள் அடங்கிய புத்தகத்தின் விலை ரூ.85 மற்ற 4 பாடங்களுக்கான ஆங்கில வழி மாதிரி வினா புத்தகத்தின் விலை ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 36 வினியோக மையங்களில் இந்த புத்தகம் கிடைக்கும். முதல் கட்டமாக 50 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. தேவைக் கேற்ப இந்த புத்தகங்கள் கூடுதலாக அச்சிடப்படும்.