கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்துவது குறித்து அணுஉலை எதிர்ப்பாளர்களுடன் தமிழக உளவுத்துறை போலீசார் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதன்மூலம் அணுஉலைக்கு இருந்து வந்த முட்டுக்கட்டை நீங்கி உள்ளதாக தெரிகிறது. அரசு நியமித்துள்ள 4 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் இன்று நெல்லை வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரூ.13,500 கோடி செலவில் 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள தலா 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அணு உலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 6 மாதமாக மறியல், பேரணி, முற்றுகை என ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தற்போது 8 மணி நேரத்திற்கும் அதிகமாக மின் வெட்டு இருப்பதால் தொழிற்சாலைகள் செயல்பட முடியாமல் அடியோடு முடங்கி போய் உள்ளன.
இதற்கு தீர்வு காண அணுமின் நிலையத்தை உடனே இயங்கச் செய்ய வேண்டும் என பொதுமக்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட துவங்கியுள்ளனர்.
அணுமின் நிலையம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அண்ணா பல்கலைக் கழக எரிசக்தி ஆய்வு மைய பேராசிரியர் இனியன், அணுசக்தி கழக முன்னாள் தலைவர் சீனிவாசன், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் அறிவு ஒளி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயராகவன் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழுவை மாநில அரசு நியமித்துள்ளது. இவர்கள் இன்று நெல்லை வருகின்றனர். பின்னர் கூடங்குளம் சென்று அணுஉலை இடம்பெற்றுள்ள இடத்தை ஆய்வு செய்வதோடு, அங்குள்ள மக்களின் கருத்துக்களை கேட்டறிகின்றனர். இதற்கிடையில் மின்வெட்டு பிரச்னை அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதால் அதற்கு தீர்வு காணும் பொருட்டு உணுஉலையை செயல்படுத்த மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அணு உலை எதிர்ப்பாளர்களுடன் தமிழக உளவுத்துறை போலீசார் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ‘’தமிழகத்தில் மின்வெட்டை சமாளிக்க அணுஉலையை செயல்படுத்த வேண்டியது அவசியம். இனிமேலும் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் நீங்கள் மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும். எனவே, நீங்கள் ஏதேனும் கோரிக்கைகள் வைத்தால் அதனை நிறைவேற்றி தர அரசு தயாராக உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையமும் எவ்வித பிரச்னையும் இன்றி செயல்பட துவங்கும்‘’ என உளவுத்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதையடுத்து கடந்த 6 மாத காலமாக நடந்து வந்த போராட்டம் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Social Plugin