இந்திய அணியின் கேப்டன் டோனிக்கு இது போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும்.டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியிலும் தோல்வி ஏற்பட்டுள்ளது.
முதலாவது 20 ஓவர் போட்டியில் தோல்விக்கு பிறகு டோனி கூறியதாவது:-
இப்போது என்னை கேட்டால், நாங்கள் முதலில் பேட் செய்திருக்க வேண்டும் என்று தான் சொல்வேன். ஆடுகளம் 2-வது பேட் செய்ய ரொம்ப கடினமாக இருந்தது. அதே சமயம் மழையால் இங்கிலாந்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடினோம் என்பதையும் மறந்து விடக்கூடாது. அங்கு ஒரு நாள் தொடரில், நாம் எந்த ஒரு ஆட்டத்திலும் டாஸ் வெல்லவில்லை.
அதே சமயம் ஒவ்வொரு முறையும் மழை குறுக்கிட்டதால் 2-வது இன்னிங்சில் நமது பவுலர்கள் பந்து வீச மிகவும் சிரமப்பட்டனர். அதனால் தோல்வியும் ஏற்பட்டது. மழையால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதை அங்கு கற்றுக்கொண்டோம். சிட்னியிலும் அதே போன்ற வானிலை தான் காணப்பட்டது. இதனால் தான் இங்கு டாஸ் ஜெயித்ததும் சேசிங் செய்து விடலாம் என்று நினைத்து, முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தேன்.
ஆனால் நான் நினைத்தது மாதிரி நடக்கவில்லை. மழையின் தாக்கத்தால் (டாஸ் ஜெயித்ததும் மழை பெய்தது. பின்னர் ஆஸ்திரேலியா பேட் செய்த போதும் சிறிது நேரம் பெய்தது.) நமது சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீச சிரமப்பட்டனர். ஈரப்பதம் காரணமாக, பந்தை பிடித்து சரியான இலக்கில் வீசுவதற்கு `கிரீப்' கிடைக்கவில்லை.
ஆனால், இந்திய அணி பேட் செய்த போது நிலைமை மாறி விட்டது. அப்போது மழை ஏதும் பெய்யவில்லை. இதனால் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பந்து நன்கு சுழல ஆரம்பித்தது. அவர்களால் பந்தை நன்றாக பிடித்து வீச முடிந்தது. பழைய பந்து வழக்கத்தை விட அதிகமாக எகிறவும் செய்தது. இதனால் ரன்கள் குவிக்க, எங்களுக்கு கடினமாகி விட்டது.
மொத்தத்தில் வானிலை ஆட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. இருப்பினும் ஓரளவு நல்ல தொடக்கம் (5.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்) கிடைத்தது. ஆனால் அதனை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் நீண்ட நேரம் நிலைத்திருந்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றியிருக்கலாம்.
ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வாட்டின் பேட்டிங் உண்மையிலேயே அருமையாக இருந்தது. அவருக்கு டேவிட் ஹஸ்ஸி, வார்னர் உறுதுணையாக இருந்தனர். விளையாட்டில் நல்ல விளையாடுகிற அணி வெற்றி பெறும். அந்த வகையில் நல்ல ஆடிய அணி வெற்றி பெற்றிருக்கிறது. நமது தோல்வியை மறக்க முயற்சிக்கிறோம். நாளை நல்லதே நடக்கும் என்ற நம்புகிறேன். மெல்போர்னில் சிறப்பாக செயல்படுவோம்.
நாளை நடக்கும் 2 வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலாவது வென்று தொடர் தோல்விக்கு இந்திய அணி முற்றுப் புள்ளி வைக்குமா?
Social Plugin