Hot Posts

6/recent/ticker-posts

இலங்கை கொடியை கொளுத்த முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நந்தம்பாக்கத்தில் கைது!!


தோல் பொருள் கண்காட்சியில் இலங்கை கொடி ஏற்றியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஊர்வலம் நடத்தினர். அப்போது இலங்கை கொடியை கொளுத்த முயன்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய பன்னாட்டு தோல் பொருள் கண்காட்சி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இதையொட்டி கருத்தரங்க அரங்கின் முன்பகுதியில் பல நாடுகளின் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. இதில் இலங்கை அரசின் கொடியும் பறக்கிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் உஞ்சை அரசன், மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன்,  திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பாலசிங்கம், நந்தம்பாக்கம் வி.சி நிர்வாகிகள் பர்மா கண்ணன், முத்து பாண்டி தலைமையில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் இன்று காலையில் ஊர்வலம் நடத்தினர். பின்னர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜ், முகமது நாசர் ஆகியோர் தலைமையிலான 30க்கும் அதிகமான போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.  

இதற்கிடையே உள்ளே இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரு பிரிவினர், இலங்கை அரசின் கொடியை இறக்கி சாலைக்கு கொண்டு வந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் இலங்கை கொடியை தீ வைத்து கொளுத்த முயன்றனர். இதை பார்த்த உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் ஓடிச் சென்று கொடியை பறித்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் நேற்று முன்தினம், தமிழர் வாழ்வுரிமை இயக்கத்தினர், இலங்கை கொடியை அகற்றுமாறு ஆர்ப்பாட்டம் செய்து கைதானது குறிப்பிடத்தக்கது.