Hot Posts

6/recent/ticker-posts

மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு குளிர்சாதன ஓய்வறை: ஒரு மணி நேரத்துக்கு 10 ரூபாய் கட்டணம்!!

மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வருகிறது.

குறிப்பாக பயணிகள் நெரிசல் இல்லாமல் இருக்க பிளாட்பாரங்கள் அகலப்படுத்துதல், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள், ஓய்வு அறை என பல வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

பொதுவாக முதல் மற்றும் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே ரெயில் நிலையத்தில் ஏ.சி. வெயிட்டிங் ஹால் இருக்கும்.

ஆனால் அனைத்து பயணிகளும் தங்கி செல்லும் வகையில் தற்போது மதுரை ரெயில் நிலையத்தில் ஏ.சி. வெயிட்டிங் ஹால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் தங்குவதற்கு ஒரு பயணியிடம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 வீதம் வசூலிக்கப்படும். இதற்காக ஒரு ஊழியர் அங்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த அறையில் குறைந்த பட்சம் 60 பயணிகள் வரை ஒரே நேரத்தில் அமரலாம். புஷ்பேக் இருக்கை என்பதால் சாய்வாக படுத்து தூங்குவதற்கு வசதியாக சேர்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொழுதுபோக்கும் வகையில் கலர் டி.வி.யும் வைக்கப்பட்டுள்ளது. அதோடு ரெயில் புறப்படும் நேரம், வருகை நேரம் ஆகியவற்றை பார்க்கும் வகையில் அறையில் டிஸ்பிளே போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலமும் அறிவிக்கப்படுகிறது.

கிழக்கு நுழைவு வாயிலின் வடக்கு பக்கத்தில் செயல்பட்டு வரும் பார்சல் அலுவலகம் இன்று முதல் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்திற்கு மாற்றப்படுகிறது. இதனால் இங்கு பார்சல் சம்பந்தமாக வரும் வாகனங்கள் அனைத்தும் வடக்கு வெளி வீதியில் ரெயில்வே காம்பவுண்டு சுவரை ஒட்டி உள்ள கேட் வழியாக பார்சல் அலுவலகத்திற்கு சென்று வருவதால் கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.