உச்ச நீதிமன்றம் ரத்து செய்த 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் காரணமாக 6.9 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர் என்றும், இந்த லைசென்ஸ்களை மறுஏலம் விட குறைந்தது 400 நாட்களாவது ஆகும் என்றும், அதற்கான கால அவகாசத்தைத் தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு தொலைபேசி நிறுவனங்களுக்கு நாட்டின் பல்வேறு மண்டலங்களில் வழங்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 4 மாதங்களுக்குள் புதிய விதிகளை வகுத்து ஸ்பெக்ட்ரத்தை மறு ஏலம் விட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதன்படி ஜூன் 2 முதல் இந்த லைசென்ஸ்கள் ரத்தாகிவிடும். இதனால் இந்த லைசென்ஸ்கள் மூலமாக இயங்கும் பல்வேறு செல்போன் நிறுவனங்களின் 6.9 கோடி செல்போன்களின் சேவைகளும் பாதிப்புக்குள்ளாகும்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு மனு செய்துள்ளது. அதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது இயற்கை வளங்களில் ஒன்றாகும். இதன் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியிடம் ஆலோசனை கேட்பது வழக்கம். எனவே, அவரிடம் ஸ்பெக்ட்ரம் ஏலம் பற்றி கலந்தறிய வேண்டிய இருக்கிறது. எனவே புதிய ஒதுக்கீடு வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாடு முழுவதும் உள்ள 6.9 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர். புதிய லைசென்ஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் முழுமை பெற 400 நாட்களாவது தேவைப்படும். எனவே கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் தொடர்பான தீர்ப்பை திருத்த கோரிக்கை:
அதே போல மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இன்னொரு மனுவில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் பிரதமர் அலுவலக அதிகாரிகளையும் தொடர்புபடுத்தி அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு எதிராக புகார்கள் பதிவு செய்யப்படும் முன்பாக, அவர்கள் மீது வழக்கு தொடர சம்பந்தப்பட்ட அலுவலகத்திடம் அனுமதி கேட்கலாம். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எந்தவொரு அமைச்சரையும் விசாரிக்க பிரதமர் அலுவலகத்திடம் நேரடியாக அனுமதி கேட்கலாம். அந்த கோரிக்கைகளை பிரதமர் அலுவலகம் பரிசீலித்து வழக்கு தொடர்வது குறித்து 3 மாதங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். நான்கு மாதங்களுக்கு பிரதமர் அலுவலகத்திடம் இருந்து பதில் வரவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடர அனுமதி கிடைத்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அவர்களுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர முடியும் என்று ராசா விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தீர்ப்பைத் தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Social Plugin