Hot Posts

6/recent/ticker-posts

இலங்கை அணியின் வெற்றியால் இந்தியாவின் கனவு தகர்ந்தது!!


முத்தரப்பு தொடரில் இலங்கைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று விட்டது. இதனால் இந்தியாவின் இறுதிப் போட்டிக் கனவு தகர்ந்து போய் விட்டது. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்காக டேவிட் ஹஸ்ஸி கடைசி வரை போராடியும், 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இன்று இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தொடரின் கடைசி போட்டியில் விளையாடின.

போட்டியின் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் துவக்கம் மந்தமாக அமைந்தது. துவக்க வீரர்கள் ஜெயவர்த்தனே(5), தில்ஷன்(9) ஆகியோர் வந்த வேகத்தில் பிரிவிலியன் திரும்பினர்.

இந்த நிலையில் சங்கக்காரா, சந்திமால் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை மீட்க முயன்றனர். இருவரும் ஒரிரு ரன்களாக சேர்த்து அரைசதம் கடந்தனர். 3 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்த சங்கக்காரா அடித்து விளையாட முயன்ற போது கேட்சாகி அவுட்டானார். 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து ஆடி வந்த சந்திமால் 75 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த திரிமன்னே மட்டும் களத்தில் நிற்க, மறுமுனையில் விக்கெட்கள் வரிசையாக சரிந்தன. 41 ஓவர்களுக்கு பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் ஆஞ்சிலோ மேத்யூஸ்(5), பெரேரா(5), சாசித்ரா(0), குலசேகரா(0) ஆகியோர் டேனியல் கிறிஸ்டியன் பந்துகளுக்கு இரையாகினர்.

கடைசி நேரத்தில் வந்த ஹீராத்துடன் இணைந்து, திரிமன்னே அரைசதம் கடந்து 51 ரன்களில் ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய வந்த மலிங்கா 2 ரன்களுக்கு போல்டானார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இலங்கை அனைத்து விக்கெட்களையும் இழந்து 238 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் டேனியல் கிறிஸ்டியன் 9 ஓவர்களை வீசி 31 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.



239 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா களமிறங்கியது. துவக்க பேட்ஸ்மேன்கள் மேத்யூ வாடே(9) குலேசேகரா பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து டேவிட் வார்னர்(6) அவுட்டாகினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீட்டர் பாரஸ்ட் 2 ரன்களில் ஏமாற்றினார்.

அதன்பிறகு ஷான் வாட்சன் உடன் இணைந்த மைக்கேல் ஹஸ்ஸி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். ஷான் வாட்சன் அரைசதம் கடந்து தொடர்ந்த நிலையில், மைக்கேல் ஹஸ்ஸி 29 ரன்களில் அவுட்டானார்.



கடைசி ஓவர் வரை களத்தில் நின்று போராடிய டேவிட் ஹஸ்ஸி அரைசதம் கடந்தார். ஆனால் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயன்ற போது, கேட்ச்சாகி அவுட்டானார். இதனால் இலங்கை 10 ரன்களுக்கு வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இலங்கை தரப்பில் மலீங்கா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இன்றைய போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதால், இந்தியாவுக்கு இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று எந்தத் தொடரையும் வெல்ல முடியாமல் வெறும் கையுடன் நாடு திரும்புகிறது இந்தியா.