என்னப்பா ஆச்சு, இன்னிக்கு கரண்ட் கட்டே ஆகலை, அதுக்குள்ள நிலைமை சரியாப் போயிருச்சா...
இதுதான் நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் உதிர்த்த ஆச்சரிய வார்த்தைகள். காரணம், நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு அமலாகவில்லை. இதற்காக மக்கள் மகிழ்ச்சி அடையத் தேவையில்லை. பிளஸ்2 தேர்வு நடைபெறும் மையங்கள் உள்ள பகுதிகளில் மட்டும் தற்போது மின் தடையை மாற்றியமைத்துள்ளனர்.
தமிழகத்தில் கடுமையான மின் பற்றாக்குறை உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பல மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் நேற்று பிளஸ்2 தேர்வு தொடங்கியது. மின்வெட்டால் மாணவ, மாணவிகளின் தேர்வு பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக அரசுப் பள்ளிகளில் ஜெனரேட்டர் வசதி செய்து தர முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதேபோல தனியார் பள்ளிகளிலும் ஜெனரேட்டர் வசதியை செய்யுமாறும் அதற்கான செல்வை அரசு தரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பெரும்பாலான பள்ளிகளுக்கு ஜெனரேட்டரை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பரீட்சை நடைபெறும் மையங்கள் அதாவது பள்ளிக்கூடங்கள் உள்ளி பகுதிகளில் மின்வெட்டு நேரத்தை மாற்றியமைக்க அரசு உத்தரவிட்டது.
இதன் காரணமாக பள்ளிக்கூடங்கள் உள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும் பல பகுதிகளில் நேற்று மின்வெட்டே அமலாகவில்லை. இதுதான் மக்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு வேளை இரவில் கரண்ட் போகுமோ என்ற குழப்பமும் மக்களுக்கு வந்தது. ஆனால் அப்படிப் போகவில்லை. அதாவது நேற்று பல இடங்களில் மின் தடை இல்லை என்பதே செய்தி.
இருப்பினும் பரீட்சை நடைபெறும் மையங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையும் மின்தடையை அமல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
முன்னதாக அரசின் உத்தரவுப்படி பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகளில் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் மின்சாரம் போகாததால், ஜெனரேட்டரைப் பயன்படுத்த நேரிடவில்லை.
மேலும் நேற்று நடந்த முதல் தேர்வான தமிழ் முதல் தாள் பரீட்சையை மாணவர்களும் புழுக்கமில்லாமல் நிம்மதியாக எழுதினர். வினாக்களும் சுலபமாக இருந்ததாக தேர்வு எழுதி விட்டு வந்த மாணவர்கள் சந்தோஷத்துடன் கூறினர்.
Social Plugin