இந்தியர்களுக்கு தலைமை வகிக்க தெரியாது, அவர்களது கலாச்சாரம் அப்படி என்று இந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்தி முன்னாள் இந்திய பயிற்சியாளர் கிரெக் சாப்பல் தெரிவித்துள்ள கருத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
கிரேக் சாப்பல் பெரிய உளறுவாயர் என்பது உலகம் அறிந்தது. இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது சரியான 'மேய்ப்பராக' செயல்பட முடியாமல் போன அவர் கடுப்புடன் வெளியேறிப் போனார். போகும்போது இந்திய வீரர்களிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டே போனார்.
கடந்த 2005-07ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிவர் கிரெக் சாப்பல். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தனது புத்தகத்தை வெளியீட்டு விழாவில் பேசிய போது, இந்திய கலாச்சாரம் மற்றும் அணி குறித்து சர்ச்சை ஏற்படும் வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்திய அணியி்ல் ஒரு குழுவாக செயல்படும் பழக்கம் கிடையாது. இந்தியாவில் தலைமை பொறுப்பு ஏற்க தகுந்த பயிற்சி அளிக்கப்படுவதில்லை. இதனால் இந்தியாவில் தலைமை வகிக்கும் நபர்கள் மிகவும் குறைவு.
இந்திய கலாச்சாரத்தில் சிறு வயதில் குழந்தைகளின் தேவைகள் குறித்து பெற்றோர் முடிவு எடுப்பார்கள். சற்று வளர்ந்த பிறகு பள்ளி ஆசிரியர்கள் முடிவுகளை எடுப்பார்கள். அதன்பிறகு அணியில் உள்ள பயிற்சியாளர்கள் முடிவுகளை எடுப்பார்கள்.
இந்திய கலாச்சாரத்தின்படி யாராவது மேலே வர தலையை உயர்த்தினால், மற்றவர்கள் அதனை தாக்குவார்கள் அல்லது தலையில் குட்டி விடுவார்கள். இதனால் பொறுப்புகளை வகிக்க பயந்து தலை குனிந்த நிலையில் இந்தியர்கள் நடக்கின்றனர்.
இந்தியர்களுக்கு தலை தாழ்த்தி நடப்பது குறித்து ஆங்கிலேயர்கள் தான் கற்று கொடுத்தனர். யாராவது பொறுப்புகளை வகித்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இதனால் யாரும் தலைமை பொறுப்புகளை ஏற்க விரும்புவதில்லை.
ஆனால் இதில் இந்திய அணியின் கேப்டன் டோணி மட்டும் வித்தியாசமானவர், தைரியமானவர். அவர் கேப்டனாக பொறுப்பு ஏற்றதில் இருந்து தனது பொறுப்புகளை சரியாக செய்து வருகின்றார். டோணி சில தீர்மானங்களை எடுக்கும் போது, மூத்த வீரர்கள் உட்பட யாரையும் பொருட்படுத்துவதில்லை. தனது முடிவில் டோணி உறுதியான உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் டோணி பொறுப்பேற்றது ஒரு சிறந்த நிகழ்வாக கருதுகின்றேன்.
3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக தொடரும் டோணி தனது பணியை சிறப்பாக செய்து வருகின்றார். ஆஸ்திரேலியா அணியுடன் ஒப்பிடும் போது இந்திய அணி 50 சதவீதம் அதிக போட்டிகளில் பங்கேற்கின்றது.
இந்தியர்களை பொறுத்த வரை டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க அதிக விருப்பம் இல்லாதவர்கள். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தொடர் தோல்வி பெற்றதன் மூலம் இது வெளிப்படையாக தெரிந்தது.
இந்திய அணியில் அனில் கும்ளேவுக்கு பிறகு கேப்டனாக வேண்டும் என்று ஷேவாக் விரும்பினார். ஆனால் அவரது ஆசை நிறைவேறாமல் போனதால், சமீபகாலமாக அணியில் மோதல் ஏற்பட்டது என்றார்.
Social Plugin