Hot Posts

6/recent/ticker-posts

கடத்தல்காரர்களைப் பிடிக்கும் வருவாய் புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குநர் ராஜன் லஞ்ச வழக்கில் கைது!!

சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குநரான சி.ராஜன், லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், சென்னை வட்டாரத்தில் ராஜன் மிகப் பிரபலமான ஒரு அதிகாரி ஆவார். கப்பல்கள், விமானங்களில் நடைபெறும் கடத்தல்களைத் தடுத்து நிறுத்தி பல நூறு கோடி பெருமானமுள்ள பொருட்களை ராஜன் தலைமையிலான படையினர் பிடித்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராஜனே சிக்கியிருபப்து அனைவரையும் அதிர வைத்துள்ளது.

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் போன்றோருக்கு அடுத்து டிவியிலிலும், மீடியாக்களிலும் அடிக்கடி அடிபடும் பெயர் சி.ராஜன். இவர் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையின் சென்னை பிராந்திய கூடுதல் இயக்குநர் ஆவார்.

சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்களைப் பிடிப்பதுதான் ராஜன் மற்றும் அவரது படையினரின் வேலையாகும். கப்பல்கள், விமானங்கள் மூலம் கடத்தப்படும் பொருட்களைப் பிடிப்பது இவர்களின் பணி. போதைப் பொருட்கள், ஆடம்பர நகைகள், அரிய வகை உயிரினங்கள், தங்கக் கட்டிகள் என பல வகையான பொருட்களின் கடத்தலைக் கண்காணித்து ராஜன் தலைமையிலான படையினர் பிடித்து பலரையும் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் சமீப காலமாக ராஜன் மீது சரமாரியான புகார்கள் சிபிஐக்குப் போயின. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், ராஜனை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில், சென்னையில் பிரபல செல்போன் வியாபாரியான உபயதுல்லா வெளிநாடுகளிலிருந்து ஏராளாமான செல்போன் இறக்குமதி செய்து வந்தார். மேலும், ஏற்கனவே இவர் வழக்கு ஒன்றிலும் சிக்கியுள்ளார். இதனையடுத்து, உபயதுல்லாவின் வங்கி கணக்கை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை முடக்கியது.

இந்த வங்கி கணக்கை மீண்டும் செயல்பட வைக்கக்கோரி உபயதுல்லா ராஜனை அணுகி உள்ளார். அதற்கு ராஜன் இரண்டரை லட்சம் பணமும், ஒரு ஐபேடும் தரும்படி கேட்டதாக தெரிகிறது. இதன்படி உபயதுல்லா இரண்டரை லட்சம் பணமும், ஐபேடும் எடுத்து கொண்டு ராஜனின் வீட்டுக்கு சென்று உள்ளார்.

பணத்தையும், ஐபேடையும் ராஜனின் கார் டிரைவர் முருகேசனிடம் கொடுத்து உள்ளார். நள்ளிரவில் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து இந்த கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது.

இதை கண்காணித்த சி.பி.ஐ. அதிகாரிகள் உபயதுல்லாவை கையும் களவுமாக பிடித்தனர்.மேலும், ராஜனையும் அவருடைய கார் டிரைவரையும் கைது செய்தனர். பின்னர் இவர்கள் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ராஜனை மார்ச் 23ம் தேதி வரை சிறையில்அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ராஜன் புழல்சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜனின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து தற்போது ராஜன் மூலம் பரபரப்பு கிளம்பியுள்ளது.