ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசம் , இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் இலங்கை அணி வென்றால், இந்தியா பைனலுக்கு முன்னேறும். ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் அணி 3 லீக் ஆட்டத்தில் 2 வெற்றி ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று (1 போனஸ் புள்ளி) பைனலுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்தியாவும் 3 லீக் ஆட்டங்களில் 2 வெற்றி ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.
இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணி வங்கதேசத்தை வீழ்த்தினால், அந்த இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்க 8 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மாறாக, வங்கதேசம் வென்று இந்தியாவுக்கு சமமாக 8 புள்ளிகளைப் பெற்றால், இந்தியா , வங்கதேசம் மோதிய லீக் ஆட்டத்தில் வங்கதேசம் வென்றுள்ளதால் அந்த அணிக்கே பைனல் வாய்ப்பு கிடைக்கும்.
தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டாலும், இலங்கை அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கலாம். அதே சமயம், உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவோடு களமிறங்கும் வங்கதேசம், ஆக்ரோஷமாக விளையாடி இந்தியா, இலங்கை அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் உறுதியுடன் உள்ளது.
பாகிஸ்தான் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதப் போவது யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்து விடும்.
Social Plugin